காப்பாளர் (647) புலிபோலக் (643) கண்மாறாடவர் ஒடுக்கம் ஒற்றுகையினாலே (642) கண்ணராய்க் கொள்கையராய் (644) ஆண்மையராய்க் (645) கணையராய் (647) அரைநாளமயமும் (649) எழுந்து நயம்வந்து வழங்கலிற் (650) பனிக்கடல்புரையப் (629) பாயலில்வளர்வோர் கண்இனிதுமடுப்பப் (630) பகலுறக்கழிப்பி (653) எனமுடிக்க. இங்ஙனம் கழிக்கின்றது, இராப்பொழுதென்றுணர்க. 654. [போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கை :] பிணி விட்ட போது கமழ் நறு பொய்கை-தளையவிழ்ந்த பூக்கள் நாறும் நறிய1பொய்கைகளிலே, 655. [தாதுண் டும்பி போதுமுரன் றாங்கு :] போது தாது உண் தும்பி முரன்றாங்கு-அப்பூக்களில் தாதையுண்ணுந்தும்பிகள் பாடினாற் போல, 656. [ஓத லந்தணர் வேதம் பாட :] வேதம் ஓதல் அந்தணர் பாட-வேதத்தை முற்ற ஓதுதலையுடைய அந்தணர் வேதத்தில் தெய்வங்களைத் துதித்தவற்றைச் சொல்ல, 657-8. [சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி, யாழோர் மருதம் பண்ண :] யாழோர் சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி மருதம் பண்ண-யாழோர் தாளவறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத்தெறித்து2மருதத்தை வாசிக்க. 658-9. காழோர் கடு களிறு கவளம் கைப்ப-பரிக்காரர் கடிய களிற்றைக் கவளத்தைத்3தீற்ற, 659-60. நெடு தேர் பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட-நெடிய தேரிலே பூணும் பந்தியில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவைக் குதட்ட, 661. பல் வேறு பண்ணியம் கடை மெழுக்கு உறுப்ப-பண்டம் விற்பார் பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகளை மெழுகு தலைச்செய்ய, 662. கள்ளோர் களி நொடை நுவல-கள்ளைவிற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல, களி : ஆகுபெயர்.
1.பொய்கை-மானிடராக்காத நீர்நிலை ; சீவக. 337, ந. 2.மருதம் காலைப்பண் என்பது, புறநானூறு, 149-ஆம் செய்யுளாலும், சீவக. 1991-ஆம் செய்யுளாலும் அறியப்படும். 3.தீற்ற-உண்பிக்க; "தீற்றாதோ நாய்நட்டா னல்ல முயல்" (பழ. 14) ; தீற்றென்பது காரிததாது வென்பர் ; (வீரசோ. தாதுப். சூ. 6)
|