விலங்குகள் கூட்டிலேயுறைகின்ற மிக்கவலியையுடைய புலியுடனே முழங்க, 678. வானம் நீங்கிய நீல் நிறம் விசும்பின்-1ஆகாயம் தனக்குவடிவின்றென்னும் தன்மை நீங்குதற்குமேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே, இனிச் செக்கர்வானம்போன விசும்பென்பாருமுளர். 679. மின்னு நிமிர்ந்தனையர் ஆகி-மின்னு நுடங்கின தன்மையினை யுடையராய், நறவு மகிழ்ந்து-மதுவையுண்டு, 680-81. மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த பரூஉ. காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு-மாட்சிமைப்பட்ட பேரணிகலங்களையுடைய மகளிர் கணவரோடே புலந்தனராய் அறுத்த பருத்தலையுடைய வடமாகிய ஆரஞ்சொரிந்த முத்தத்தோடே, மகளிர் மகிழ்ந்து புலர்ந்தனராய்ப் பரிந்த முத்தமென்க. 682. [பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன :] பொன் சுடு நெருப்பு உக்க நிலம் என்ன-பொன்னையுருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம்போல, என்றது, கரியும் தழலும் பொன்னுஞ் சிந்திக்கிடந்தாற்போல வென்றதாம். 683. [அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவும் :] பிறவும்-முத்தொழிந்த மாணிக்கமும் மரகதமும் பொன்னும் மணிகளும், அம் மென் குரும்பை காய்-அழகிய மெத்தென்ற இளைதாகிய பச்சைப் பாக்கும். படுபு-விழுந்து, 684. தரு மணல் முற்றத்து-கொண்டுவந்திட்ட மணலையுடைய முற்றத்தே, அரி ஞிமிறு ஆர்ப்ப-வண்டுகளும் மிஞிறுகளும் ஆரவாரிப்ப, 685. மெல் பூ செம்மலொடு நல் கலம் சீப்ப-மெல்லிய பூவாடல்களுடனே நல்லபூண்களையும் பெருக்கிப்போகடும்படி, முத்தத்தோடே (681) பிறவும் காயும் (683) முற்றத்தே விழுகையினாலே (684) அவற்றையும் செம்மலோடே கலங்களையும் (685) அரி ஞிமிறார்ப்பச் (684) சீப்ப (685) வென்க.
1.அருக் கனப் பரப்பு" (தக்க. 474) என்பதும், ‘மகாதேவர்க்குப் பின்புலோகத்தில் உயர்ந்த பொருளாயுள்ளது ஆகாசமொன்றுமே ; அஃது அரூபியாகும் ; இஃது எல்லாச் சமயிகளுக்கும் ஒக்கும்'என்ற அதன் உரையும் இங்கே அறிதற்குரியன.
|