702-3. சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிறு இலங்கு கதிர் இளவெயில் தோன்றி அன்ன-ஒளியைச்சொரிந்து அத்தகிரியிலே போக விளங்குகின்ற கிரணங்களையுடைய ஞாயிற்றினுடைய விளங்குங் கிரணங்களின் இள வெயில் தோன்றினாலொத்த மகளிர் (712), என்றது, பூத்த அசோகம்பொழிலிடத்தே இளவெயில் எறித்தாற் போலப்1புணர்ச்சியாற்பெற்ற நிறத்தையுடைய மகளிரென்க. 704. [தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை :] தாவு இல் தமனியம் வளைஇய விளங்கு இழை-ஓட்டற்ற பொன் நடுஅழுத்தின மணிகளைச் சூழ்ந்த விளங்குகின்ற பேரணிகலங்களையும், 705. நிலம் விளங்கு உறுப்ப மேதக பொலிந்து - நிலத்தையெல்லாம் விளக்கமுறுத்தும்படி கற்புமேம்படப் பொலிவுபெற்று, 706. மயில் ஓர் அன்ன சாயல்-மயிலோடு ஒருதன்மைத்தாகிய மென்மையினையும், 706-7. மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மாவின்தளிரினது அழகையொத்த நிறத்தினையும், 707-8. தளிர் புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் - தளிரினது புறத்தில் ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையுடையராய், கூர் எயிறு-கூரிய எயிற்றினையும், 709. ஒள் குழை புணரிய வள் தாழ் காதின்-ஒள்ளிய மகரக்குழை பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும், 710-11. [கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத், தாதுபடு பெரும்போது புரையும்வாண் முகத்து :] கயத்து அமன்ற கடவுள் சுடர் இதழ் தாமரை தாது படு பெரு போது புரையும் வாள் முகத்து-குளத்திலே நெருங்கின2தெய்வங்கட்குரிய நெருப்புப்போலுமிதழ்களையுடைய தாமரையினது தாதுண்டாம் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும், 712. ஆய் தொடி மகளிர்-நன்றாக ஆராய்ந்த தொடியினையுமுடைய மகளிருடைய, பொலிந்து (705) திதலையராய் (708) இழையினையும் (704) சாயலினையும் (706) மேனியினையும் (707) எயிற்றினையும் (708) காதினையும் (709) முகத்தினையும் (711) தொடியினையுமுடைய மகளிர் (712) என்க.
1."தேசு மொளியுந் திகழ நோக்கி" (பரி. 12:21) என்பதன் உரையைப்பார்க்க; "மதம்-காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பு" (திருச்சிற். 69, பேர்.) ; "அந்தி யாரழ லெனப்பரி தியினொளி யடைந்த பின் " "குந்தித் தெரிவை ................. அந்தித் தெரிவை நிகரென்ன வழகின் மிக்காள்" (வி. பா. சம்பவச்சருக்கம், 38, 66) 2.பெரும்பாண். 289-90-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
|