தொடுங்கிப் போகம் நுகர்வார்க்குச் சிறந்த காலமாயினும் அரசன் 1போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறானாய் அப்போகத்தில் மனமற்று வேற்றுப் புலத்துப் போந்திருக்கின்ற இருப்பாகலின், அவற்கு நல்லதாகிய வாடையாயிற்று. எனவே காமத்திடத்து வெற்றியெய்தலின், வாகைத் திணையாயிற்று ; இப்பாட்டு, சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் (தொல். அகத். சூ. 54.) அகப்பொருளாமேனும், " வேம்புதலை யாத்த நோன்காழெஃகம் " (176) என 2அடையாளப்பூக்கூறினமையின், அகமாகாதாயிற்று. 1 - 2. [வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென :] பொய்யா வானம் வையகம் பனிப்ப வலன் வளைஇ ஏர்பு புது பெயல் பொழிந்தென - பருவம் பொய்யாத மேகம் உலகெல்லாங்குளிரும்படியாகத் தான் கிடந்தமலையை வலமாக வளைந்து எழுந்திருந்து கார்காலத்து மழையைப் பெய்ததாக, 3. ஆர்கலி முனைஇய கொடு கோல் கோவலர் - வெள்ளத்தை வெறுத்த 3கொடி கோலினையுடைய இடையர், 4. ஏறு உடை இனம் நிரை வேறு புலம் பரப்பி -ஏற்றையுடைய இனங்களையும் பசுக்களையும் மேட்டுநிலமாகிய முல்லைநிலத்தே மேயவிட்டு, எருமையையும் ஆட்டையும் 4இனமென்றார். 5. புலம் பெயர் புலம்பொடு கலங்கி - தாம் பயின்ற நிலத்தைக் கைவிட்டுப்போம் தனிமையினாலே வருத்தமெய்தி, ஊர்க்கு அண்ணியவிடத்தேமேய்ந்து ஊரிற்றங்காமையிற் புலம் பெயர் புலம்பென்றார். 5 - 6. கோடல் நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ - காந்தளினது நீண்ட இதழ்களாற்கட்டின கண்ணி நீரலைத்தலாலே கலக்கமெய்த, 7 - 8. மெய் கொள் பெரு பனி நலிய பலருடன் கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க - தம் உடம்பிடத்தேகொண்ட பெரிய
1 "போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது "(புறநா. 8 : 2) ; " பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு " (கலித். 68 : 1) 2 அடையாளப்பூ : முருகு. 43 - 4. ந. குறிப்புரையைப் பார்க்க. 3 முல்லைப். 15. ந. குறிப்புரையைப் பார்க்க 4 பசு எருமை ஆடு என்பன மூன்றும் மூவினமென்றும் முந்நிரை யென்றும் வழங்கப்பெறும் ; " மூவின மேய்த்தல் "(நம்பி. சூ. 22 : 13) ; "இனமூன்றுந் துன்றப் , போற்றிக் குடிமல்கிய பொற்பின பாடியெல்லாம் "(தணிகை. நாடு. 69) ; " சால நன்று முந்நிரையு முடையேன் "(பெரிய. சிறுத்தொண்ட. 49) ; "நிரைவாழி - முந்நிரை வாழ்க " (தக்க. 9, உரை)
|