447

செவரி நாரையொடு (17) இரு களி பரந்த ஈரம் வெள் மணல் (16) எ வாயும் கவர (17) - சிவந்த வரியினையுடைய நாரைகளோடே கரிய வண்டலிட்ட சேறுபரந்த ஈரத்தினையுடைய வெள்ளிய மணலாகிய எவ்விடங்களிலுமிருந்து அக்கயலைத்தின்ன,

19 - 20. பொங்கல் வெள் மழை 1அகல் இரு விசும்பில் துவலை கற்ப - பொங்குதலையுடைய வெள்ளியமேகம் அகன்ற பெரிய ஆகாயத்தே சிறு துவலையாகத்தூவ மேற் கற்கும்படியாகக் கூதிர் ஈண்டுநின்றது (72) எனமேலே கூட்டுக.

கற்பவென்னுஞ் செயவெனெச்சம் ஈண்டு எதிர்காலமுணர்த்திற்று. 

துவலைகற்பவென்றார், மிகப்பெய்தலே தனக்கு இயல்பென்பது தோன்ற.

21 - 2. அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த வள் தோடு நெல்லின் வரு கதிர் வணங்க - அழகிய இடத்தையுடைய அகன்ற வயனிறைந்த நீராலே மிக்கெழுந்த வளவிய இலையினையுடைய நெல்லினின்றும் புறப்பட்ட கதிர் முற்றி வளைய,

2 புல்லாதலின் தோடென்றார்.

23 - 4. முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் கொழு மடல் அவிழ்ந்த குழுஉ கொள் பெரு குலை - பெரிய அடியினையுடைய கமுகினது நீலமணியையொத்த கழுத்திற் கொழுவிய மடலிடத்துப் பாளை விரிந்த திரட்சியைக்கொண்ட தாறுகளில்,

25 - 6. [நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு, தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற :] தென் நீர் பசு காய் நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு சேறு கொள முற்ற - தெளிந்தநீரை உள்ளேயுடைய பசியகாய் நுண்ணிய நீர்தான் திரளும்படியாகவீங்கிப் பக்கந்திரண்டு இனிமைகொள்ளும்படி முற்ற,

27. [நளிகொள் சிமைய விரவுமலர் வியன்கா :] விரவு மலர் நளிகொள் சிமையம் வியல் கா - முன்பு விரவின பூக்கள்செறிதலைத் தன்னிடத்தேகொண்ட உச்சியினையுடையவாகிய அகன்றபொழில்கள்,

28. குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க - குளிர்ச்சியைத் தம்மிடத்தேகொண்ட கொம்புகளையுடையவாகி அவற்றில் ஏற்றுநின்ற நிறத்தையுடைய மழைத்துளி மாறாமல்வீழ,


1 " அகலிரு விசும்பில் - தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயத்திடத்தே " (பெரும்பாண். 1, ந.)

2 "தோடே மடலே............புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர் "(தொல். மரபு. சூ. 86)