அரும்பினது அழகிய இதழ்கள் பகற்பொழுதைக் கடந்து விரியுஞ் செவ்வி மணக்கையினாலே, செவ்வரியரும்பு பாடமாயிற் சிவந்த வரியினையுடைய அரும்பென்க. 41. 1பொழுது அறிந்து - அந்திக்காலமென்றறிந்து, என்றதனாற் கூதிரால் 2இரவும்பகலுந் தெரியாவென்றார். 42. இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ - இரும்பாற் செய்த 3தகளியிலே நெய்தோய்ந்த திரியைக்கொளுத்தி, விளக்கு : ஆகுபெயர். 43. நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது - 4நெல்லையும் மலரையுஞ்சிதறி 5இல்லுறை தெய்வத்தை வணங்கி, 44. மல்லல் ஆவணம் மாலை அயர - வளப்பத்தையுடைய அங்காடித்தெரு வெல்லாம் மாலைக்காலத்தைக் கொண்டாட, மகளிர் (39) கமழுகையினாலே பொழுதறிந்து (41) திரிக்கொளீஇத் (42) தூவித்தொழுது (43)அயரவென்க. 45 - 8. [மனையுறை புறவின் செங்காற் சேவ, லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா, திரவும் பகலு மயங்கிக் கையற்று, மதலைப் பள்ளி மாறுவன விருப்ப:] இரவும் பகலும் மயங்கி (47) - இராக்காலமும் பகற்காலமும் தெரியாமல் மயங்குகையினாலே, மனை உறை புறவின் செ கால் சேவல் (45) இன்பு உறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது (46) - மனையின் கண்ணேயிருக்கும் புறவினுடைய சிவந்தகாலினையுடைய சேவல் தான் இன்பநுகரும் பெடையோடு மன்றிலே சென்று இரைதேடியுண்ணாமல்,
1 மலர்கள் மலர்தலாற் பொழுதை அறிதல் பண்டை வழக்கமென்றுதெரிகின்றது. பொழுதினை அறிவித்தல்பற்றியே மலரும் பருவத்துப் பூவரும்பு போதெனப்பட்டதென்று தோற்றுகிறது. தக்கயாகப் பரணி உரையாசிரியர் நாளென்பதற்கு மலரென்று பொருள்கூறியிருத்தல் இக்கருத்தைத் தழுவிப்போலும். 2 " இரவும் பகலு மயங்கி " (நெடுநல். (47) 3 முல்லை. 85, ந. குறிப்புரையைப் பார்க்க. 4 " கொடியிடையார், அகன்ற மனையிடமெங்கும் கதிரோன் மறைந்த மாலைக்காலத்தே அரும்பு புரிநெகிழ்ந்த முல்லையினது ஒளி மலரை நெல்லோடே தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி " (சிலப். 9 : 1 - 2, அடியார்.) 5 இல்லுறை தெய்வம் : " அணங்குடை நல்லில் "(மதுரைக்.578)
|