45

1 - திருமுருகாற்றுப்படை

பூக்களிலே சென்று ஆரவாரிக்கும் திருப்பரங்குன்றிலே நெஞ்சமர்ந் திருத்தலுமுரியன்.

உம்மை : எதிரது தழீஇய எச்சவும்மை.

கூடற்குடவயிற் (71) குன்று; வண்டின் அரிக்கணம் (76) துஞ்சி (73) ஊதி (74) ஒலிக்குங் (76) குன்று.

அதாஅன்று - அதுவன்றி,

அதாஅன்றென அகரமிட்டெழுதுக ; இதனை "அன்றுவருகாலை" (தொல். உயிர்மயங். சூ. 56) என்பதனாலும், "இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி" (தொல். உயிர்மயங். சூ. 35) என்பதனுள், "தொன்றியன் மருங்கின்" என்பதனானு முடிக்க.

திருச்சீரலைவாய்

78. வைந்நுதி யென்பது முதல் அலைவாய்ச்சேறல் (125) என்னுந் துணையும் ஒரு தொடர்.

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - கூர்மையுடைத்தாகிய தோட்டி வெட்டின வடுவழுத்தின புகரையுடைய மத்தகத்தே,

வைந்நுதி : ஆகுபெயர்.

79. வாடா மாலை ஓடையொடு துயல்வர - பொன்னரிமாலை பட்டத்தோடே கிடந்து அசைய,

80. 1படும் மணி இரட்டும் மருகின் - தாழ்கின்ற மணி மாறி யொலிக்கின்ற பக்கத்தினையும்,

கடு நடை - கடிய நடையினையும்,

81. கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் - கூற்றுவனையொத்த பிறரால் தடுத்தற்கரிய வலியினையுமுடைய,

82. கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு - ஓடுங்காற் காற்றெ ழுந்தாலொத்த களிற்றை யேறி,

மருங்கு (80) முதலியவற்றையுடைய வேழத்தை நுதலிலே மாலைபட்டத்தோடே யசைய ஏறியென முடிக்க.

83-4. ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி-ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய முடிக்குச் செய்யுந் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற முடியோடே கூடி விளங்கிய ஒன்றற்கொன்று மாறுபாடுமிகும் அழகினையுடைய மணி,

ஐவேறுருவு: 2"தாம முகுடம் பதுமங் கிம்புரி, கோடக மிவைமுடிக் கைவே றுருவே."


1.ஓசைமணி (வேறுரை)

2."தாம முகுடம் பதுமங் கோடகங், கிம்புரி முடியுறுப் பைந்தெனக் கிளப்பர்" (திவாகரம்); "கோடகங் கிம்புரி முகுடந் தாமம், பதும முடியுறுப் பிவையைந் தாகும்" (பிங். 1169)