கை அற்று (47) மதலை பள்ளி மாறுவன இருப்ப (48) - செயலற்றுக் கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகைகளிலே பறவாதிருந்து கடுத்த கால் ஆறும்படி மாறிமாறி இருக்க, இனித் தலைமாறியிருப்ப வென்பாருமுளர். மதலைப்பள்ளி - 1கபோதகத்தலை. இறையுறை புறவும் பாடம். 49 - 50. கடி உடை வியல் நகர் சிறு குறு தொழுவர் கொள்உறழ் நறு கல் பல கூட்டு மறுக - காவலையுடைய அகன்ற மனைகளில் சிறியராகிய குற்றேவல் வினைஞர் 2கருங்கொள்ளின் நிறத்தையொத்த நறிய 3சாத்தம்மியிலே கத்தூரி முதலிய 4பசுங்கூட்டரைக்க, 51 - 2. வடவர் தந்த 5வான் கேழ் வட்டம் தென்புலம் மருங்கில் சாந்தொடு துறப்ப - வடநாட்டிலுள்ளார் கொண்டுவந்த வெள்ளிய நிறத்தையுடைய 6சிலாவட்டம் தென்றிசையிடத்திற் சந்தனத்தோடே பயன்படாமற் கிடப்ப, 53. [கூந்தன் மகளிர் கோதை புனையார் :] மகளிர் கூந்தல் கோதை புனையார் - மகளிர் குளிர்ச்சி மிகுதியால் தம்மயிரிடத்து மாலையிட்டு முடியாராய், 54. பல் இரு கூந்தல் சில் மலர் பெய்மார் - தம் பலவாகிய கரிய மயிரிடத்தே 7மங்கலமாகச் சிலமலரிட்டு முடித்தலை வேண்டி, 55 - 6. தண் நறு தகரம் முளரி நெருப்பு அமைத்து இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - தண்ணிய நறிய மயிர்ச்சந்தனமாகிய விறகிலே நெருப்பை யுண்டாக்கி அதிலே கரிதாகிய வயிரத்தையுடைய அகிலோடே வெள்ளிய 8கண்ட சருக்கரையையுங் கூட்டிப் புகைப்ப, 57 - 8. கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த செ கேழ் வட்டம் சுருக்கி - கையாற் புனைதல்வல்ல உருக்குத்துகின்றவனாலே அழகு பெறப் பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம் உறையிடப்பட்டு,
1 கபோதகத்தலை - வீட்டின் ஓருறுப்பு. 2 கருங்கொள் : நாலடி. 387. 3 சாத்தம்மி =சாந்து அம்மி. 4 " தண்ணறுஞ் சாந்தமும் - குளிர்ந்த நறிய பசுங்கூட்டும் " (சிலப். 5 : 13, அடியார்.) 5 " வான்கேழ் வட்டம் - அழகு கெழுமிய சிலா வட்டம் " (சிலப். 4 : 37 , அரும்பத.) ; " வான்கேழ் வட்டம் - மிக்க ஒளியையுடைய சிலா வட்டம் " (சிலப். 4 : 37 , அடியார்.) 6 சிலாவட்டம் - இங்கே சந்தனக்கல். 7 " மங்கலமாகிய.................பூவே " (நன். பொது. சூ.30) 8 (பி - ம்.) ‘ கண்டு சருக்கரை'
|