மைத்துத், தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்,கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து :] தாழொடு குயின்ற (84) துணை மாண் கதவம் பொருத்தி (81) - தாழோடே சேரப் பண்ணின இரண்டாய் மாட்சிமைப்பட்ட கதவைச் சேர்த்தி, இணை மாண்டு (81) புது போது அவிழ் குவளை பிடி கால் அமைத்து (83) - இணைதல் மாட்சிமைப் பட்டுப் புதிய போதாய் அவிழ்ந்த குவளைப் பூவோடே பிடிகளையும் தன்னிடத்தேபண்ணி, என்றது, 1நடுவே திருவும் இரண்டு புறத்தும் இரண்டு செங்கழு நீர்ப்பூவும் இரண்டு பிடியுமாக வகுத்த உத்தரக் 2 கற்கவி. நாளொடு பெயரிய விழுமரத்து கோள் அமை (82) நெடுநிலை (86) - உத்தரமென்னும் நாளின் பெயர் பெற்ற உத்தரக்கற்கவியிலே செருகுதல் பொருந்தின நெடுநிலையென்க. அமைத்தென்னுமெச்சம் பெயரிய வென்பதனோடு முடிந்தது. கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து (85) போர் அமைபுணர்ப்பின் (84) நெடுநிலை (86) - கைத்தொழில் வல்ல தச்சன் கடாவு கையினாலே வெளியற்றுப் பலமரங்களும் தம்மிற்கிட்டுதலமைந்த கூட்டத்தினையுடைய நெடுநிலை யென்க. 86. ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய, 3அதிற் றெய்வத்திற்கு, 4வெண்சிறுகடுகும் நெய்யு மணிந்தது. 87. வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக - வென்றி கொண்டெழும் கொடிகளோடே யானைகள் சென்று புகும் படி யுயர்ந்த,
1 இரண்டு யானைகளின் இடையே திருமகள் வீற்றிருத்தல், கோயில் முதலிய இடங்களிற் காணப்படும் சிற்பங்களாலும், " வரிநுத லெழில் வேழம் பூநீர்மேற் சொரிதரப், புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித், திருநயந் திருந்தன்ன" (கலித். 44 : 5 -7) என்பதனாலும், " இரண்டானை பக்கத்தேநின்று நீரைச் சொரிய நடுவே தாமரைப் பூவிலேயிருந்த திருமகள் " (சீவக. 2595, ந.) என்பதனாலும் அறியலாகும். 2 கற்கவி : சிலப். 15 : 213, அடியார். 3 நிலையில் தெய்வம் உறைதல் : " அணங்குடை நெடுநிலை" (மதுரைக் . 353) 4 இவை யிரண்டும் தெய்வங்களால் விரும்பப்படுவன ; முருகு. 228- ஆம் அடியும், மதுரைக் 354-ஆம் அடியின் விசேடவுரையும், ‘ தெய்வங்கள் இனிதாகக் கொண்ட ஐயவி ' (சீவக. 113, ந.) என்பதும் இதனை உணர்த்தும்.
|