461

151. மெல் இயல் மகளிர் - மெத்தென்ற தன்மையினையுமுடைய சேடியர்,

நல் அடி வருட - 1துயிலுண்டாகுமோவென்று அடியைத் தடவ, மேனி (148) முதலியவற்றையுடைய மகளிர் (151) புனைவில் (147) நல்லடி வருடவென்க.

152 - 3. நரை விராவுற்ற நறு மெல் கூந்தல் செ முக செவிலியர் கை மிக குழீஇ - நரை கலத்தலுற்ற நறிய மெல்லிய மயிரினையுடைய சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் இவளாற்றாவொழுக்க மிகுகையினாலே திரண்டு.

154. குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி - 2பொருளொடு புணராப் பொய்ம்மொழியும் மெய்ம்மொழியுமாகிய உரைகள் பலவற்றையும் பலகாற் சொல்லி,

" ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே " (தொல். செய். சூ. 175) என்பது இலக்கணம்.

155 - 6. இன்னே வருகுவர் இன் துணையோர் என உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து - இப்பொழுதே வருகுவர் நினக்கினிய துணையாந் தன்மையை யுடையோரென்று அவள் மனத்துக்கு இனிய வார்த்தைகளைக் கூறவும் அதற்குப் பொருந்தாளாய் மிகக்கலங்கி,

157 - 8. [ நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கா, லூறா வறுமுலை கொளீஇய :] ஊறா வறுமுலை கொளீஇய நுண்சேறு வழித்த நோன் நிலைதிரள் கால் - குடங்களைக் கடைந்து தைத்த சாதிலிங்கம்பூசின வலிய நிலையினையுடைய மேற்கட்டியிற் றிரண்ட கால்களை,


1 துயிலுதற்குச் காலைவருடல் மரபு ; இது, " மழையார் சாரற் செம்புனல் வந்தங் கடிவருடக், கழையார் கரும்பு கண்வளர் சோலைக்கலிக்காழி ", "தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந்திருவை யாறே " (திருஞா. தே.) என்ற திருவாக்குக்களிற் குறிப்பிக்கப் பெற்றிருத்தல் காண்க.

2 " பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும், பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் " (தொல். செய். சூ.173) என்பதும்,‘ பொருளொடு.............. பொய்ம்மொழியானும் - பொருண்முறை யின்றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவன; அவை ஓர் யானையுங் குதிரையும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக் கியையாப் பொருள் பட்டதோர் தொடர் நிலையாய் ஒருவனுழை யொருவன் கற்று வரலாற்றுமுறைமையான் வருகின்றன ; பொருளொடு ................... நகைமொழியானும் - பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற் கேதுவாகும் தொடர்நிலையானும் ' (ந.) என்ற அதனுரையும் இத்தொடர்களின் பொருளை விளக்கும்.