லடிவருட (151) ஓவியங் கடுப்ப (147) வதியுமரிவைக்கு (166) என வினைமுடிக்க. 166 - 7. அரிவைக்கு இன்னா அரு படர் தீர - அரிவைக்குத் தீதா யிருக்கின்ற ஆற்றுதற்கரிய நினைவு தீரும்படி, பாசறைத் தொழில் (188) விறல் தந்து (167) இன்னே முடிக தில் (168) - வேந்தன் பாசறையிடத்திருந்து பொருகின்ற போர்த்தொழில் அவனுக்கு வெற்றியைக் கொடுத்து இப்பொழுதே முடிவதாக ; இஃது எனக்கு விருப்பம் என முடிக்க. (168) அம்ம - கேட்பாயாக ; இஃது, இவள் வருத்தமிகுதி தீரவேண்டிக் கொற்றவையை நோக்கிப் பரவுகின்றவள் கூற்றாயிற்று, கேட்பாயாக வென்றது கொற்ற வையை நோக்கி. முடிகவென்ற வியங்கோள் , வேண்டுகோடற் பொருண்மைக்கண் வந்தது. தில் விழைவின்கண் வந்தது. 168 - 71. மின் அவிர் ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை நீள் திரள் தட கை நிலமிசை புரள களிறு களம் படுத்த பெரு செய் ஆடவர் - ஒளி விளங்குகின்ற பட்டத்தோடே பொலிவுபெற்ற போர்த்தொழிலைப்பயின்ற யானையினுடைய நீண்டதிரண்ட பெருமையினையுடைய கை அற்று நிலத்தே புரளும்படி யானையை முன்னர்க்கொன்ற பெரிய செயலையுடைய வீரருடைய, செயலென்னும் வினைப்பெயர் செய்யென முதனிலையாய் நின்றது. 172. ஒளிறு வாள் 1விழு புண் காணிய புறம் போந்து - விளங்கும் வாளினாற் போழ்ந்த சீரியபுண்ணைக் கண்டு பரிகரித்தற்குத் தானிருக்கின்ற இடத்திற்குப் புறம் போந்து திரிதரும்வேந்தன் (187)என்க. 173. 2வடந்தை தண் வளி - வடதிசைக் கண்ணதாகிய குளிர்ந்த காற்று, என்றது வாடையை. 173 - 5. [ எறிதொறு நுடங்கித், தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல், பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல :] நல் பல் பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் எறிதொறும் நுடங்கி தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய அழல - நன்றாகிய பலகால் விளக்கிலெரிகின்ற பருத்தகொழுந்து வாடைக்காற்று அடிக்குந்தோறும் அசைந்து தெற்கு நோக்கியெழுந்து சாய்ந்த தலையினையுடையவாய் எரிய, விளக்கு : ஆகுபெயர்.
1 " விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்டபுண் "(குறள், 776, பரிமேல்.) 2 இப்பாட்டிற்கு, "வடந்தைத் தண்வளி"என்னும் இப்பகுதி உயிர்போன்றது.
|