464

176 - 7. வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்ட - வேப்பந் தாரைத் தலையிலேகட்டினவலியகாம்பினையுடைய வேலோடே முன்செல்கின்ற சேனாபதி புண்பட்ட வீரரை அடைவே அடைவேகாட்ட,

177 - 80. பின்னர் மணிபுறத்து இட்டா மா தாள் பிடியொடு பருமம் களையா பாய் பரி கலி மா இரு சேறு தெருவின் எறி துளி விதிர்ப்பபின்னாக மணிகளைத் தன்னிடத்தேயிட்ட பெருமையையுடைய தாளினையுடைய குசையோடே பக்கரைவாங்காத பாய்ந்துசெல்லுஞ் செலவினையுடைய செருக்கின குதிரைகள் கரிய சேற்றையுடைய தெருவிலே தம்மேலே வீசும் துளிகளையுதற, தாளென்றது வாய்க்கருவியிற் கோத்துமுடியும் குசையிற்றலையை.

181. புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ - இடத்தோளினின்றும் நழுவிவீழ்ந்த அழகினையுடைய ஒலியலை இடப்பக்கத்தே யணைத்துக்கொண்டு,

182 - 3. வாள் தோள் கோத்த வன்கண் காளை சுவல் மிசை அமைத்த கையன் - வாளைத்தோளிலே கோத்த தறுகண்மையையுடைய வாளெடுப்பான் றோளிலே வைத்த வலக்கையையுடையனாய்,

183. முகன் அமர்ந்து - 1புண்பட்டவீரர்க்கு அகமலர்ச்சிதோன்ற முகம் பொருந்தி,

184. நூல் கால்யாத்த மாலை வெண்குடை - நூலாலே சட்டத்தே கட்டின முத்துமாலையினையுடைய கொற்றக்குடை,

185. தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப - தவ்வென்னு மோசைபட்டு அசைந்து பரக்கின்ற துளியைக் கரக்க, தாழ்துளியும் பாடம்.

186 - 7. 2நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் சிலரொடு


1 அரசன் முகம் பொருந்துவதால் வீரர் அகமலர்வாரென்ற இச் செய்தியோடு, "தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும், பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன்- விழுச்சிறப்பிற், சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன, புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்" (தொல். புறத். சூ. 8, ந. மேற்.) என்ற வெண்பாவின் கருத்து ஒப்புநோக்கற்குரியது.

2 "நள்ளென் மாலை" (புறநா. 149 : 1-2) என்பதற்கு, ‘ நள்ளென்னும் ஓசையையுடைய மாலைப்பொழுது ' என்று அதன் உரையாசிரியரும், " நள்ளிருள் யாமத்து" (சிலப். 15:105) என்பதன் பதவுரையில், ‘ செறிந்த இருளையுடைய வைகறை யாமத்தே ' எனவும் அதன் விசேடவுரையில், ‘நள் : நளியென்னும் உரிச்சொல் ஈறுதிரிபு ; செறிவின் கண் வந்தது' எனவும் அடியார்க்கு நல்லாரும் எழுதுவர்.