48

பத்துப்பாட்டு

மடவரல் நகையெனக் கூட்டித் தனக்கு ஓரறியாமைதோன்றுந் தன்மையுடைத்தாகிய நகையென்று கூறுக.

அவளொடு 1நகையமர்தலின் அறியாமை கூறினார். காமநுகர்ச்சியில்லாத இறைவன் இங்ஙனம் நகையமர்ந்தான், உலகில் இல்வாழ்க்கை நடத்தற் கென்றுணர்க. அது, "தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்" (திருவா. திருச்சாழல், 9) என்பதனுள், "பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர், விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ" என்பதனானுணர்க.

விரிந்தன்று (92) கொடுத்தன்று (94) வேட்டன்று (100) நகையமர்ந்தன்று (102) ஓர்க்கும் (96) விளக்கும் (98) என்பன முற்றுச் சொல்.

102-3. [ ஆங்கம் மூவிரு முகனு முறைநவின் றொழுகலின்:]

அ மூவிரு முகனும் - அவ்வாறுமுகமும்,

ஆங்கு முறை நவின்று ஒழுகலின் - அத்தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையினாலே அம்முகங்களுக்குப் பொருந்த,

104-6. [ஆரந் தாழ்ந்த வம்பகட்டு 2மார்பிற், செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு, வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர் தோள்:]

ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய தோள் - பொன்னாற்செய்த ஆரந்தங்கிய அழகையுடைத்தாகிய பெருமையையுடைய மார்பிற்கிடக்கின்ற உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரியினையும் தன்னிடத்தே வந்து விழும்படி வாங்கிக்கொண்ட தோள்,

வாங்கிய வென்றார், அவ்வரி தோளளவும் வந்துகிடந்தமை தோன்ற; "வரையகன் மார்பிடை வரியு மூன்றுள" (சீவக. 1462) என்றார் பிறரும்.

மொய்ம்பின் வண்புகழ் நிறைந்து - தம்முடைய வலியினாலே பெரிய புகழ் நிறையப்பட்டு,

சுடர் விடுபு வசிந்து வாங்குதோள் - சுடரையுடைய படைக்கலங்களை யெறிந்து பகைவர்மார்பைப் பிளந்து அவற்றை வாங்குதோள்,

சுடரையுடைய படைக்கலங்களைச் சுடரென்றார்; அஃது ஆகுபெயர்.


1. (பி-ம்.) ‘நகையமர்தல் இன்றியமையாமை'

2.மார்பிலே சீதேவியைக் கைக்கொண்ட வலியினையுடைய, ஒளிவிட்டு வளவியபுகழ் நிறைந்து வளர்ந்து நீண்டுநிமிர்ந்த தோள்கள் (வேறுரை)