482

மறைந்திருக்கும் தன்னுயிரைத் தான் தாங்கியிராமைக்குக் காரணமாகிய ஆற்றுதற்கரிய நினைவு,

இழை நெகிழ்த்த வீவு அரு கடுநோய் (3) செப்பல் வன்மையின் யான் செறித்து (12)- தானணிந்த கலன்களை நெகிழப்பண்ணின, 1 மருந்துகளாற் கெடுத்தற்கரிய கடிய நோய் நினக்குச்சொல்லுதற்கு எளிதன்றி வலியதன்மையையுடைமையினாலே யான் அதனை என்னுள்ளே அடக்கி,

நல் கவின் தொலையவும் நறு தோள் நெகிழவும் (9) புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் (10) கடவலின் (12) - அவளுடைய நன்றாகிய அழகுகெடவும் நறியதோள் மெலியவும் வளை கழலுதலைப் பிறர் அறியவும் தனிமை மேன்மேலே வந்து வருத்தவும் நினக்கு அறிவுறாமற் செலுத்துகையினாலே,

நீயும் (8) அலவுற்று (7) அகல் உள் ஆங்கண் அறியுநர் வினாய் (4)-நீயும் அலம்வந்து அகன்ற இடத்தையுடைய ஊரிடத்துக் 2கட்டினாலும் 3கழங்கினாலும் எண்ணியறிவாரை வினாவி அவர் தெய்வத்தான்வந்த வருத்தமென்றலின்,

வினாயுமென்றவிடத்து உம்மையைப் பேணி (6) என்பதன் பின்னே கூட்டுக.

வேறு உருவின் பல் கடவுள் (6) நறையும் விரையும் ஓச்சியும் (7) பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் (5) பேணியும் (6)-வேறுபட்ட வடிவினையுடைய பல தெய்வங்களைத் தூபங்களும் சந்தனமுதலியனவுங் கொடுத்தும் பரவியும் வணங்கியும் கலந்தபூக்களைச்சிதறியும் வழிபட்டும் அதனால் தீராமையின்,


1 "மருந்துபிறி தின்மைநற் கறிந்தனை சென்மே" (நற். 247:9) ; "மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே" (குறுந்.68:4) ; "பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி, மருந்துபிறி தின்மையி னிருந்து வினையிலனே" (அகநா. 147:13-4) ; "மருந்திற் றீராது........நீதர வந்த நிறையழி துயரம்" (நம்பி. சூ. 127, மேற்.)

2கட்டு - சிறுமுறத்திற் பரப்பிய நெல்லிற்பார்க்கும் ஒருவகைக் குறி; இங்ஙனம் குறிபார்ப்பவள், கட்டுவித்தி யெனப்படுவாள் ; இதனைத் திருக்கோவையார், 285-ஆம் செய்யுளாலும் அதனுரையாலும், "கட்டுவிச்சி கட்டேறிச், சீரார் சுளகிற் சிலநெல் பிடித்தெறியா, வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவாப், பேரா யிரமுடையா னென்றாள்" (20 - 22) என்னுஞ் சிறியதிருமடலாலும், பெருங் 1.37:232- ஆம் அடிமுதலியவற்றாலும் உணர்க.

3கழங்கு - கழற்கொடிக்காய். கட்டினாலும் கழங்கினாலும் எண்ணியறிவார், கட்டுவிச்சியும் வேலனும் ; தொல். களவு. சூ. 24, ந.