494

105 - 6. எரி அவிர் உருவின் அம் குழை செயலை தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக - நெருப்புப்போல விளங்கும் நிறத்தையுடைய அழகிய தளிரையுடைய அசோகினது தாதுவிழுகின்ற குளிர்ந்த நிழலிலே இருந்த அளவிலே,

107. [எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ் :]

சுரிவளர் நறுங்காழ் : பின்னேகூட்டுதும்.

எண்ணெய் நீவிய நலம் பெறு சென்னி (116) - பலகாலும் எண்ணெய் வார்த்த நன்மையைப்பெற்ற தலையிற் குஞ்சி (112) என்க.

108. தண் நறு தகரம் கமழ மண்ணி -குளிர்ந்த நறிய மயிர்ச்சந்தனத்தை நாறும்படியாகப்பூசி,

109. ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா - அந்த ஈரம் புலரும்படி விரலாலலைத்துப் புலர்த்துதற்றொழிலாலே பிணிப்பைவிடுத்து,

110. நறு காழ் (107) காழ் அகில் அம் புகை கொளீஇ - அதனை நறிய கரிய வயிரத்தினையுடைய அகிலினது அழகிய புகையூட்டுகையினாலே,

இதில் நறுங்காழ் கூட்டிற்று,

110 - 11. யாழ் இசை அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேங் கலந்து - யாழோசையினது அழகுமிகுகின்ற பாட்டினையுடைய மிஞிறுகள் ஆரவாரிக்கும்படி அகிலினது நெய்கலந்து,

112. [மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் :]

மணி நிறம் கொண்ட சுரி வளர் (107) மா இரு குஞ்சியின்- 1நீல மணியினது நிறத்தைத் தன்னிடத்தேகொண்ட கடைகுழன்றுவளர்ந்த கரிய பெரிய மயிரின்கண்ணே,

இதிற் சுரிவளர் கூட்டிற்று.

மண்ணி (108) அவிழாப் (109) புகைகொளுவுகையினாலே (110) தேங்கலந்து (111) ஒருகாழ்வளைஇ (118) மணிநிறங்கொண்ட குஞ்சி (112)என்க.

113. மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் - மலையிடத்தனவும் நிலத்திடத்தனவும் கொம்புகளிற் பூத்தனவும் சுனைகளிற் பூத்தனவுமாகிய,

114. வண்ணம் வண்ணத்த மலர் - பலநிறங்களையுமுடையமலர், பல சாதிகளையுமுடையமலர்,

என ஒன்று நிறமும், ஒன்று சாதிவேறுபாடுங் கூறினார்.

114 - 5. ஆய்பு விரைஇய தண் நறு தொடையல் வெள் போழ் கண்ணி - அம்மலரை ஆராய்ந்துதொடுத்த தண்ணிய நறிய தொடையலினையும் வெள்ளியதாழைமடலிலேயுடைத்தாகிய கண்ணியினையும்,


1 "நீலமாய்ச் சுரிந்த குஞ்சி" (சீவக. 1722) ; "இந்திர நீலமொத்திருண்ட குஞ்சியும்" (கம்ப. மிதிலை. 56)