116. [நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சி :] நாம் உற மிலைச்சி - 1முருகனென்றச்சமுறும்படி சூடி, குஞ்சியின்கண்ணே (112) மிலைச்சியென்க. நலம்பெறுசென்னி - முன்னே கூட்டிற்று. 117-8. பைங்கால் 2பித்திகத்து அ இதழ் அலரி அம் தொடை ஒருகாழ் வளைஇ - பசியகாம்பினையுடைய பிச்சியினுடைய அழகிய இதழ்களையுடைய பூவைத்தொடுத்த அழகினையுடைய தொடையாகிய ஒரு வடத்தைச் சுற்றி. இஃது அந்திக்காலத்து மலரும் பூவாதலின், அதனைத் தேங்கலந்து (111) ஒருகாழ்வளைஇ (118) மணிநிறங்கொண்டகுஞ்சி (112) எனக் குஞ்சிக்கு இயல்பாக்கி முன்னே கூட்டுக. 118-20. [செந்தீ, யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ, யந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்ப :] குவவு மொய்ம்பு அலைப்ப செ தீ ஒள் பூ பிண்டி அம் தளிர் ஒருகாது செரீஇ - திரளுதலையுடைய தோளிலே வீழ்ந்து அலைக்கும்படி சிவந்த நெருப்புப்போலும் ஒள்ளிய பூக்களையுடைய அசோகினது அழகிய தளிரை ஒருகாதிலே செருகி, 120 - 22. சாந்து அருந்தி மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து தொன்றுபடு பூணொடு நறு தார் பொலிய - சந்தனத்தை உள்ளடக்கி வலிதங்குதல்கொண்ட அகன்றுயர்ந்த மார்பிடத்தே தொன்றுபட்டுவருகின்ற பேரணிகலங்களோடே நறியமாலை பொலிவு பெற, 123. செம்பொறிக்ரு ஏற்ற - 3முன்றுவரியாகிய உத்தமவிலக் கணத்திற்குப் பொருந்தின மார்பு (121) என்க. 123-4. வீங்கு இறை தட கையின் வண்ணம் வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து - பூண் இறுகின முன்கையையுடைய பெரியகையிலே வண்ணத்தையுடைய வரிந்த வில்லையெடுத்து அம்புகளைத் தெரிந்து பிடித்து, 125. நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி - நுண்ணிய தொழில்களையுடைய கச்சைக் கட்டினசேலை துளக்கமறக்கட்டி, 126-7. [இயலணிப் பொலிந்த வீகை வான்கழ, றுயல்வருந்தோறுந் திருந்தடிக் கலாவ :] ஈகை இயல் அணி பொலிந்த வான் கழல் துயல்வருந்தோறும் திருந்து அடி கலாவ - பொன்னாற் செய்யப்பட்ட பூண்களிற்பொலிவு பெற்ற நன்றாகிய வீரக்கழல் பெயரும்பொழுதெல்லாம் பிறக்கிடாத அடியிலே ஏற்றிழிவுசெய்ய,
1 "முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணி" (அகநா. 28:6) 2 "பித்திகக் கோதை" (பெருங். 1. 33:76) 3 முருகு. 104 - 5-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.
|