128-9. முனை பாழ் படுக்கும் துன் அரு துப்பின் பகை புறம் கண்ட பல் வேல் இளைஞரின் - பகைப்புலத்தைப் பாழாக்கும் கிட்டுதற்கரிய வலியையுடைய பகைகளை முதுகுகண்ட பலவேலினையுடைய வீரரைப்போலே, 130-31. உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும் முளைவாள் எயிற்ற வள் உகிர் ஞமலி - பார்க்கின்ற சினத்தாலே செருக்கித் தம் மேலொன்று நெருங்குந்தோறும் கோபிக்கும் மூங்கில் முளைபோலும் ஒளியையுடைத்தாகிய பல்லினையுடையவாகிய பெரிய உகிரையுடைய நாய், 132. திளையா கண்ண வளைகுபு நெரிதர - இமையாக்கண்களை யுடையவாய் எம்மை வளைத்துக்கொண்டு மேலேமேலே வருகையினாலே, 133-4. [நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா, மிடும்பை கூர் மனத்தே மருண்டுபுலம் படர :] யாம் நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர - யாங் களஞ்சி அவ்விருப்புக்குலைந்து கடிதிற்செல்லுதலாற்றாது வருத்தமிக்க மனத்தையுடையேமாய் மயங்கி வேற்றுப்புலத்து ஏறச்செல்லாநிற்க, 135-6. மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து ஆ காண் விடையின் அணி பெற வந்து - தனக்குமாறாகிய விடைகளையெல்லாம் பொருது கெடுத்த மனச்செருக்கினையுடைய தானறியாத நிலத்திற் புதிய ஆவைக்காணும் 1ஏறுபோல அழகுபெற வந்து, வேட்கைமிகுதிகூறுதற்கு வேறுபுலத்து ஆவென்றார். இத்துணையும் ஏத்தல் கூறினார். 136-8. [எம், மலமர லாயிடை வெரூஉத லஞ்சி, மெல்லிய வினிய மேவரக் கிளந்து :] அ இடை எம் அலமரல் வெரூஉதல் அஞ்சி மெல்லிய இனிய மேவர கிளந்து - யாங்கள் போகின்றபொழுது எம்மனத்திற் சுழற்சியாலே வெருவுதற்குத் தான் அஞ்சி மெல்லியவாய் இனியவாயிருக்கின்ற சொற்களை எமக்குப் பொருந்துதல்வரச் சொல்லி, இதனால் 2ஏதீடுகூறினாள். 138 - 9. எம் ஐம்பால் ஆய் கவின் ஏத்தி - எம் 3ஐவகைப்பட்ட மயிரினையுடைய பலரும் ஆராய்ந்த அழகைப்புகழ்ந்து அசைகின்ற (140) இளையீ (141) ரென்க. 139. ஒள் தொடி - ஒள்ளிய தொடியினையும்,
1 "துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து" (குறிஞ்சிப். 235) என்று பின் வரும் அடியோடு இது கருத்துத் தொடர்புடையதாதல் காண்க ; குறுந். 74:4. 2ஏதீடு - காரணமிட்டுரைத்தல். 3ஐவகையாவன : குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சையென்பன ; (சீவக. 2437, ந.)
|