159 - 60. முன்பால் உடல் சினம் செருக்கி கணை விடுபு - மெய்வலி யோடே கோபித்தலாற்பிறந்த சினத்தாலே மயங்கி அம்பையெய்து, விடுபு : விகாரம். புடையூ - தட்டையைப் புடைத்து, 160 - 61. கானம் கல்லென மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர - காடெல்லாம் கல்லென்னும் ஓசை பிறக்கும்படி வாயைமடித்து விடுகின்ற 1சீழ்க்கையராய் மிக்க ஓசையையுண்டாக்கி அக்களிற்றைப் புனத்தினின்றும் ஓட்டுகையினாலே, வெடிபடுத்தார்த்தெனவும் பாடம். 162-5. [கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக, விரும்பிணர்த்தடக்கை யிருநிலஞ் சேர்த்திச், சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங் கொல்பு, மையல் வேழ மடங்கலி னெதிர்தர :] சினம் திகழ் கடாம் செருக்கி மையல் வேழம்-சினம் விளங்குதற்குக் காரணமாகிய மதத்தாலே மனஞ்செருக்கி மயக்கத்தையுடைத்தாகிய யானை, மரம் கொல்பு - மரங்களை முறித்து, கார் பெயல் உருமின் பிளிறி - கார்காலத்து மழையின் உருமேறு போல முழக்கத்தையுண்டாக்கி, சீர் தக இரு பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி ஒய்யென (166) மடங்கலின் எதிர்தர - தன்தலைமைக்குத் தக்கதாகக் கரிய சருச்சரையை யுடைத்தாகிய பெரிய கையைச்சுருட்டி நிலத்தே எறிந்து கடுகக் கூற்றுவனைப் போலே எங்கள்மேலே வருகையினாலே, 166-8. [உய்விட மறியே மாகி யொய்யெனத், திருந்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து, விதுப்புற மனத்தேம் விரைந்தவற் பொருந்தி :] ஒய்யென : முன்னேகூட்டிற்று. உய்வு இடம் அறியேமாகி 2விதுப்பு உறு மனத்தேம் - உயிர் கொண்டு பிழைப்பதோரிடத்தை ஆண்டு வேறுணரேமாகி நடுக்கமுற்ற மனத்தையுடைய யாங்கள், நாணு மறந்து திறந்து கோல் எல் வளை தெழிப்ப விரைந்து அவன் பொருந்தி - 3உயிரினுஞ் சிறந்த நாணைக்காத்தலை மறந்து திருந்திய திரட்சியையுடைத்தாகிய ஒளியினையுடைய வளையொலிப்ப விரைந்து சென்று அவனைச்சேர்ந்து,
1சீழ்க்கை - நாவினது நுனியைமடித்துச்செய்யும் ஒலி. 2விதுப்பு - விரைதலென்பர் பரிமேலழகர். 3 "உயிரினுஞ் சிறந்தன்று நாணே" (தொல். களவு. சூ.22)
|