கால்தளர்ந்தொழுகாதே யென்றெடுத்து, யான் நின் அழகியநலத்தை நுகர்வேன் ; நின்னை நீங்குவேனென்று சிறிதும் அஞ்சுதலைப் பரிகரியெனச் சொல்லி, 182. மாசு அறு சுடர் நுதல் நீவி - குற்றமற்ற ஒளியினையுடைய நுதலைத் துடைத்து, 182-3. நீடு நினைந்து என் முகம் நோக்கி நக்கனன் - நெடுநாள் இக்களவொழுக்கம் நிகழவேண்டுமென்று நினைந்து என்முகத்தைப் பார்த்துத் சிரித்தான் ; 183-5. [அந்நிலை, நாணு முட்கு நண்ணுவழி யடைதர, வொய்யெனப் பிரியவும் விடாஅன் :] அந்நிலை : பின்னே கூட்டிற்று. நண்ணுவழி 1நாணும் உட்கும் அடைதர ஒய்யென பிரியவும் விடான் - அங்ஙனம் அவன் அணுகாநின்ற விடத்துத் தனக்கு இயல்பாகிய 2நாணமும் அச்சமும் அவ்விடத்தேவந்து தோன்றுகையினாலே விரையத் தன்னிடத்துநின்றும் இவள் நீங்கவும் விடானாய், 185-6. [கவைஇ, யாக மடைய முயங்கலின் :] அ நிலை (183) கவைஇ ஆகம் அடைய முயங்கலின் - அங்ஙனம் நின்றநிலையிலே கையாலே யணைத்து இவள் மார்பு தன்மார்பிலே ஒடுங்கும்படி தழுவு கையினாலே, இதனால் ஏதீடும் வேட்கை யுரைத்தலும் கூறினாள். 186-7. [அவ்வழிப், பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை :] பழு மிளகு உக்க பாறை நெடு சுனை - பழுத்தமிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறையிடத்து நீண்ட சுனையிலே, 188. முழு முதல் கொக்கின் தீ கனி உதிர்ந்தென - பெரிய அடியினையுடைய மாவினுடைய இனியபழங்கள் உதிர்ந்தனவாக அப்பழத்தாலும், 189-90. [புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி, னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேறல் :] பலவின் நெகிழ்ந்து உகு நறு பழம் -பலவினுடைய விரிந்து தேன் பரக்கின்ற நறியபழத்தாலும், விளைந்த தேறல் - உண்டான கட்டெளிவு, புள் எறி பிரசமொடு ஈண்டி - நிரம்புதலால் தன்னை நுகர்கின்ற ஈயினைத் தள்ளியுகுத்த தேனாலேவந்துதிரளுகையினாலே, 191. நீர் செத்து அயின்ற தோகை - தனக்கு எளிய நீராகக்கருதி அத்தேறலையுண்ட மயில்,
1.குறிஞ்சிப். 21, ந. குறிப்புரையைப் பார்க்க.
2நாணம்-காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கம்; அச்சம் - அன்புகாரணத்திற் றோன்றிய உட்கு ; தொல். களவு, சூ. 8. ந.
|