191-2. [வியலூர்ச், சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி :] சாறுகொள் ஆங்கண் வியல் ஊர் விழவு களம் நந்தி - விழாக்கொள்ளுதற்குரிய அவ்விடங்களையுடைய அகற்சியையுடைய ஊர்களில் விழாக் கொள்ளுதலையுடைய களத்தே மிக்கு, ஆங்கணென்றது கோயில்களை. 193. 1அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடும் மகள் - அரித்தெழுகின்ற ஓசையைக் கூட்டுதலையுடைய இனிய வாச்சியங்களொலிப்ப ஆடுகின்றமகள். 194. கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் - கழாய்க்கயிற்றிலே ஏறி ஆடுகின்ற தாளத்தினால் தான் ஆற்றாது தளருமாறுபோலத் தளருஞ் சாரல், தேறலயின்ற தோகை கூத்தாட ஆற்றாது தளருஞ் சாரலையுடைய குன்றென்க. இதற்கு 2உள்ளுறையுவமங் கொள்ளுமாறு :- மிளகு உக்கபாறை அந்நிலத்து மாக்களுறைகின்ற ஊராகவும், நெடுஞ்சுனை தலைவன் குடியாகவும், மாம்பழத்தாலும் பலாப்பழத்தாலும் விளைந்ததேறல் தந்தையாலும் தாயாலுமுளனாகிய தலைவனாகவும், பிரசம் இவரைக்கூட்டினபால் வரைதெய்வமாகவும், அதனையுண்டமயில் உயர்ந்த தலைவனைத் தன் குலத்திற்கு ஒத்தானாகக்கருதி நுகர்ந்த தலைவியாகவும் அத்தேறலிற் பிறந்த களிப்புக் களவொழுக்கத்தாற்பிறந்த பேரின்பமாகவும் மயில் ஆடவாற்றாததன்மை வருந்திக்குறைந்த தன்மையாகவும் உள்ளுறையுவமங்கொள்க. 195-7. [வரையர மகளிரிற் சாஅய் விழைதக, விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட், டண்கம ழலரி தாஅய் :] விண்பொரும் சென்னி கிளைஇய காந்தள் தண் கமழ் அலரி வரை அரமகளிரில் சாஅய் விழைதக தாஅய் - விண்ணைத் தீண்டுகின்ற சிகரங்களிலே கிளைத்த செங்காந்தளினுடைய குளிர்ந்த மணக்கின்ற பூக்கள் கீழே வரையரமகளிர் பரந்து விளையாடுதலிற் றந்நலம் சிறிதுகெட்டு விரும்புதல்தகும்படி கீழே வந்து பரந்து,
1 "அரிக்கூ டின்னியங் கறங்க" (மதுரைக். 612) என்ற அடிக்கும் இதற்கும் சிறிதே வேறுபாடுண்மையும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய, ‘அரித்தெழும் ஓசையையுடைய சல்லி கரடி முதலியவற்றோடே கூடிய இனிய ஏனைவாச்சியங்கள் ஒலியா நிற்ப' என்ற உரையும் இங்கே கருதற் குரியன. 2.உள்ளுறையுமத்தினியல்பை, "உள்ளுறையுவமம்" (தொல். அகத். சூ. 46) என்னுஞ் சூத்திரமுதலியவற்றாலுணர்க.
|