509

னைக் குறியாகக்கருதிச் செல்லாநின்று மீண்டு மனையிடத்தேபுகினும் அதற்கு வெறுத்தலைச் செய்யான் ;

244. இளமையின் இகந்தன்றும் இலனே - அவன்றான் இளமைப் பருவத்தைக் கடந்ததுமிலன் ;

244-5. [வளமையிற், றன்னிலை தீர்ந்தன்று மிலனே :] வளமையின் என்றும் (242) தன் நிலை தீர்ந்தன்றும் இலனே - நற்குணங்களைத் திரித்தற்குரிய 1செல்வச்செருக்கான் எந்நாளும் தன்குலத்திற்குரிய நற் குணங்களின் நீங்கியதுமிலன் ;

ஏகாரங்கள் : ஈற்றசை.

245-6. கொன் ஊர் மாயம் வரவின் இயல்பு நினைஇ தேற்றி - 2அலர் முதலியவற்றான் அச்சத்தையுடைய இவ்வூரின்கண்ணே தனக்குப் பொய்யாயிருக்கின்ற இரவுக்குறியிலே கூடுதற்கு வருகின்ற வரவினது தன்மையை இஃது ஒழுக்கமன்றென்று நினைத்து அவன் வரைந்து கொள்ள இல்லறநிகழ்த்துதலே நல்லொழுக்கமென்று துணிகையினாலே,

247-8. [நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா, வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்கண் :] இவள் பெரு மதர் மழை கண் நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா ஈரிய கலுழும் - இவளுடைய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள் பெருந்துளி எறிந்துபெய்தமலர்போலே அழகு கெட்டு இமைசோர்ந்து ஈரத்தினையுடையவாய்க் கலங்காநிற்கும் ;

249-61. [ஆகத் தரிப்பனி யுறைப்ப நாளும், வலைப்படுமஞ்ஞையி னலஞ்செலச் சாஅய், நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு, லளைச் செறி யுழுவையு மாளியு முளியமும், புழற்கோட் டாமான் புகல்வியுங் களிறும், வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத், துருமுஞ் சூரு மிரைதே ரராவமு, மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங், கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு, நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும், பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும், வழுவின் வழாஅ விழுமமவர், குழுமலை விடரக முடையவா லெனவே :]


1"அறநி ரம்பிய வருளுடை யருந்தவர்க் கேனும், பெறல ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்" (கம்ப. மந்தரை. 70) ; "செல்வம்வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார், சொல்வன வறிந்து சொல்லார் சுற்றமுந் துணையு நோக்கார், வெல்வதே நினைவ தல்லாம் வெம் பகை வலிதென் றெண்ணார், வல்வினை விளைவு மோரார் மண்ணின்மேல் வாழு மாந்தர்" (வி - பா. கிருட்டினன். 143)

2அலர் - பலரறிந்துகூறும்பழிமொழி ; "அலரென்பது இன்னா னொடு இன்னாளிடையதுபோலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது" (இறை. சூ. 22, உரை)