புகர் போந்தை புள் (74) வெரீஇ (73) இரியும் (74) கல் எறியும் கவண் (73) - நிறத்தையுடைய பனையிலிருக்கும் பறவைகள் அஞ்சிக் கெட்டுப்போதற்குக் காரணமான கல்லையெறியும் கவணையுடைய கலிமாக்கள் (62) என முன்னே கூட்டுக. இனன் ஒக்கல் (61) கரு தொழில் கலி மாக்கள் (62) - ஓரினச் சுற்றத்தினையும் வலிய தொழிலையுமுடைய செருக்கின் 2 பரதவர்பிள்ளைகள், கடல் 3 இறவு இன்சூடு தின்றும் - (63) கடலிறாக்களின் இனிய சுடப்பட்டதனைத் தின்றும், வயல் ஆமை புழுக்கு உண்டும் (64) - வயலில் ஆமையைப் புழுக்கின இறைச்சியைத் தின்றும், வறள் 4 அடும்பின் மலர் மலைந்தும் (64) - மணலிலே படர்ந்த அடப்பம் பூவைத் தலையிலே கட்டியும் , புனல் ஆம்பல் பூ சூடியும் (66) - நீரினின்ற ஆம்பற்பூவைப் பறித்துச் சூடியும், நீல் நிறம் விசும்பின் வலன் ஏர்பு திரிதரு (67) நாள் மீன் விராயகோள் மீன் போல (68) - நீல நிறத்தையுடைய ஆகாயத்தே வலமாக எழுந்து திரியும் 5 நாள்களாகிய மீன்களோடே கலந்த கோள்களாகிய மீன்கள்போல, மலர் தலை மன்றத்து (69) மேழகம் தகரொடு சிவல் விளையாட (77) பலர் உடன் குழீஇ (69) - அகன்ற இடத்தையுடைய மன்றிலே 6 மேழகக்கிடாயோடே சிவலையுங்கொண்டு பொருவித்து விளையாடும்படி பலரும் சேரத்திரண்டு,
1 பனையிலிருக்கும் பறவைகள் அன்றில் தூக்கணங்குருவி முதலியன ; " முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக், கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக், கருங்கா லன்றில் " (குறுந். 301 : 1 - 3); " வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே, யவையினும் பலவே சிறுகருங்காக்கை, யவையினு மவையினும் பலவே குவிமட, லோங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த, தூக்கணங் குரீஇக் கூட்டுள சினையே " (தொல். களவு. சூ. 20, ந. மேற்.) 2 பரதவர் - நெய்தனிலமாக்களுள் ஒருவகையார். 3 இறவு - ஒருவகைமீன் ; இறாலெனவும் வழங்கும். 4 அடும்பு அடம்பெனவும் வழங்கும். 5நாள்களாகிய மீன்கள் - இருபத்தேழுநத்திரங்கள் ; கோள்களாகிய மீன்கள் - நவக்கிரகங்கள் முதலியவை. 6 மேழக்கிடாய் - ஆட்டுக்கிடாய் ; சிவல் - ஒருவகைப் பறவை ; இவற்றின் போர்வென்றி, தகர்வென்றியெனவும் சிவல்வென்றியெனவும் முறையே கூறப்படும் ; பு. வெ. 349, 352-ஆம் பாடல்களைப் பார்க்க.
|