542

துணை புணர்ந்த மடம் மங்கையர் (106) கண் அடைஇய கடை கங்குலான் (115) - கணவரைக்கூடின மடப்பத்தையுடைய மகளிர் பின்பு கண்துயின்ற பிற்பட்ட சாமத்தையுடைய இராக்காலத்தே,

மாடத்தேயிருந்து (111) நயந்தும் (113) துய்த்தும் (114) மகிழ்ந்தும் (108) உடுத்தும் (107) துணைப்புணர்ந்த மடமங்கையர் (106) கண்துயின்ற கங்குல் (115) என்று கங்குற்கு அடைகூறினார்.

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் (109) மகளிர் கோதை மைந்தர் மலையவும் (110) - மாடத்தேயிருந்து நுகர்ந்து 1 அனந்தர்மிக்கமையாற் கணவர்சூடிய கண்ணியைத் தமது கோதையாக நினைத்து மகளிர் சூடிக்கொள்ளும்படியாகவும் மகளிர் சூடிய கோதையைத் தமது கண்ணியாக நினைத்து மைந்தர் சூடிக்கொள்ளும்படியாகவும் கண்டுயின்ற கங்குலென இதுவும் கங்குற்கு அடைகூறினார்.

2 நெடுங்கால் மாடத்து (111) குரூஉ சுடர் (112) ஒள் எரி நோக்கி (111) கொடு திமில் பரதவர் எண்ணவும் (112) கண் அடைஇய கடை கங்குல் (115) - அம்மாடத்திட்ட நிறவிய விளக்குக்களில் விடியற்காலத்து அவியாமல் ஒள்ளியவாய் எரிகின்ற அவையிற்றைப் பார்த்து இராக்காலத்தே வளைந்த திமிலைக்கொண்டு கடலிலே போன பரதவ ரெண்ணும்படியாகவும் கண்டுயின்ற கடைக்கங்குலென்றும் கங்குற்கு அடைகூறினார்.

விளக்குகளிலே எண்ணெயை வார்த்துத் தூண்டுவாரின்றி எல்லாரும் துயில்கோடலிற் சில எரிந்தவற்றை எண்ணினார்.

3 பொய்யா மரபின் (105) மா காவிரி (116) பூ மலி பெரு துறை (105) மணம் கூட்டும் (116) தூ எக்கர் துயில் மடிந்து (117) - பொய்யாமல்ீர்வரும் முறைமையினையுடைய பெரிய காவிரி பூ மிக்க பெரிய துறைகளிற் பூமணங்களைக் கொண்டுவந்து திரட்டும் தூய இடுமணலிலே துயில்கொண்டு கிடந்து,

பரதவர் (90) பகல்விளையாடி (103) மாடத்திலிருப்பாரெல்லாரும் கண் அடைஇய கடைக்கங்குலிலே (115) தூவெக்கர்த் துயின்மடிந்து (117) மற்றைநாள் மகளிரொடு செறிய (155) எடுத்த விழவறா வியலா வணம் (158) எனக் கூட்டுக.


1 அனந்தர் - கள்ளின் மயக்கம் ; " அனந்தர் நடுக்கம் - கள்ளின் செருக்கினாலுண்டான மெய்ந்நடுக்கம் " (பொருந. 94, ந.)

2 " உலகுகிளர்ந் தன்ன வுருகெழு வங்கம்................நீகான், மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய " (அகநா. 255 : 1 - 6)

3 " வான்பொய்ப்பினுந் தான்பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி " (பட்டினப். 5 - 6)