546

போகு இடைகழி - பெரிய இடைகழிகளையுமுடைய,

145 - 51. [ மழைதோயு முயர்மாடத்துச், சேவடிச் செறிகுறங்கிற், பாசிழைப் பகட்டல்குற், றூசுடைத் துகிர்மேனி, மயிலியன் மானோக்கிற், கிளிமழலை மென்சாயலோர், வளிநுழையும் வாய்பொருத்தி :]

மழை தோயும் உயர் மாடத்து (145) வளி நுழையும் வாய் பொருந்தி (15) - மேகஞ் செறியும் உயர்ந்த மாடத்தில் 1 தென்காற்று வருஞ்சாளரங்களைச் சேர்ந்து,

சேவடி (146) - சிவந்த அடியினையும்,

செறி குறங்கின் (146) - செறிந்த குறங்கினையும்,

பாசிழை (147) - பசிய பூணினையும்,

பகடு அல்குல் (147) - பெரியவல்குலினையும்,

தூசு உடை (148) - தூசாகிய உடையினையும்,

துகிர் மேனி (148) - 2 பவளம்போலும் நிறத்தினையும்,

மான் நோக்கின் (149) - மான் போலும் பார்வையினையும்,

கிளி மெல் மழலை (150) - கிளிபோலும் மெல்லிய மழலைவார்த்தையினையும்,

மயில் இயல் (149) சாயலோர் (150) - 3 மயிலினது இயல்போலும் மென்மையினையுமுடைய மகளிர்,

152 - 4. ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன செறி தொடி முன்கை கூப்பி - உயரா நின்ற மலைப்பக்கத்தே மெல்லிய தேன் துளிக்கும் செங்காந்தளினது அழகிய கண்ணிடத்து இணைந்த குலையையொத்த செறிந்த தொடியினையுடைய முன்கை குவிக்க,

கூப்பவெனத் திரிக்க. இரண்டு காந்தண்முகை சேர்ந்தாலொத்த கையென்க. கவிதல் - ஒன்றோடொன்று சேர்தல்.

154 - 5. [ செவ்வேள், வெறியாடு :] வெறி ஆடு செவ்வேள் - வெறியாடுதற்குரிய முருகனுக்கும்,


1 " வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம், நேர்வாய்க் கட்டளை " (நெடுநல். 61 - 2) ; " மான்கட் காலதர் " (சிலப். 5:8)

2 " பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையி, னிளங்கொடி ", " பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவை " (மணி. 4 : 124 - 5, 18 : 78) ; " பளிக்கறைப் பவழப் பாவை பரிசெனத் திகழு மேனி " (சீவக. 192)

3 சிறுபாண். 16, குறிப்புரை ; மதுரைக். 418, குறிப்புரை.