173 - 5. [ தீம்புகார்த் திரைமுன்றுறைத், தூங்குநாவாய் துவன்றிருக்கை, மிசைக்கூம்பி னசைக்கொடியும் :] தீ புகார் திரை முன் துரை - கட்கு இனிதாகிய புகாரிடத்நதுத் திரையினையுடைய துறையின் முன்னே, துவன்று இருக்கை தூங்கு நாவாய் மிசை கூம்பின் நசை கொடியும் - நிறைந்த இருப்பினையுடைய அசைகின்ற நாவாயின்மேல் நட்ட பாய்மரத்தின் மேலெடுத்த விரும்புதலையுடைய கொடிகளும், 176 - 8. [ மீன்றடிந்து விடக்கறுத், தூன்பொரிக்கு மொலி முன்றின், மணற்குவைஇ மலர்சிதறி :] மணல் குவைஇ மலர் சிதறி - மணலை மிகப்பரப்பிச் செம்பூக்களையுஞ் சிதறி, மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் - மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தினையுடைய முற்றத்தினையும், 179 - 81. [ பலர்புகுமனைப் பலிப்புதவி, னறவுநொடைக் கொடியோடு, பிறபிறவு நனிவிரைஇ :] பலி புதவின் - தெய்வத்திற்குக் கொடுக்கும் பலியினையுடைய வாசலினையு முடைய, பலர் புகும் மனை நறவு நொடை கொடியோடு பிறபிறவும் நனிவிரைஇ - கள்ளுண்பார் பலருஞ்செல்லும் மனைகளிற் சிறப்புடைக் கள்ளின் விலைக்குக் கட்டின கொடியோடே 1ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகக் கலக்கையினாலே செல்கதிர் நுழையா (183) என்க. 182. பல் வேறு உருவின் பதாகை - பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங் கொடிகளும், நீழல் - நறவுநொடைக் கொடியோடே முற்கூறிய கொடிகளும் பிற கொடிகளும் பதாகைகளும் விரவுகையினாலே இவற்றினிழலில், 183. செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின் - 2 செல்கின்ற ஞாயிற்றின் கிரணங்கள் நுழையப்படாத வளவிய ஊரெல்லையிடத்து மறுகு (193) எனக் கூட்டுக. 184. செல்லா நல் இசை அமரர் காப்பின் - கெடாத நல்ல புகழினையுடைய தேவர்கள் பாதுகாவலினாலே, 185 - 6. [நீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங், காலின் வந்த கருங்கறி மூடையும் :] நீரில் காலின் வந்த நிமிர் பரி புரவியும் - கடலிலே காற்றான் வந்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும்,
1 மதுரைக். 366 - 73. 2 பெரும்பாண். 374, குறிப்புரை.
|