550

நீரில் காலின் வந்த கரு கறி மூடையும் - கடலிலே காற்றான்வந்த கரிய மிளகுபொதிகளும்,

187. வடமலை பிறந்த மணியும் பொன்னும் - மேருவிலே பிறந்த மாணிக்கமும் 1 சாம்பூநத மென்னும் பொன்னும்,

188. குடமலை பிறந்த ஆரமும் அகிலும் - பொதியின் மலையிலே பிறந்த சந்தனமும் அகிலும்,

புகார்க்குத் தென்மேற்காதலிற் குடமலையென்றார் பொதியின் மலையை ; அன்றி மேற்குள்ள மலையென்றுமாம்.

189. தென்கடல் முத்தும் - 2 தென்றிசைக் கடலிற் பிறந்த முத்தும்,

குணகடல் துகிரும் - கீழ்த்திசைக் கடலிற் பிறந்த பவளமும்,

190. கங்கை வாரியும் - கங்கையாற்றி லுண்டாகிய பொருளும்,

அவை யானையும் மாணிக்கமும் முத்தும் பொன்னு முதலியனவும் பிறவுமாம்.

190 - 91. [3 காவிரிப் பயனு, மீழத்துணவும் :]

191. காழகத்து ஆக்கமும் - கடாரத்தில் உண்டான நுகரும் பொருள்களும்,

ஆக்கம் : ஆகுபெயர்.

192. அரியவும் - சீன முதலிய இடங்களினின்றும் வந்த கருப்பூரம் பனிநீர் குங்குமம் முதலியனவும்,

பெரியவும் - இவை யொழியப் பெரியவையாகிய பல பொருள்களும்,

நெரிய ஈண்டி - நிலத்தின் முதுகு நெளியும்படி திரண்டு,

193 - 5. [ வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி, னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு, மேமாப்ப வினிது துஞ்சி :]

ஏமாப்ப நீர் நாப்பண்ணும் நிலத்தின்மேலும் இனிது துஞ்சி - ஏமாப்பினாலே புகாரினடுவிடத்தும் கரையினிடத்தும் அழிவின்றி இனிதாகத் தங்குகையினாலே,

வளம் தலை மயங்கிய நன தலை மறுகின் - செல்வம் தலை தெரியாத அகன்ற இடங்களையுடைய தெருவுகளையும்,


1 சாம்பூநதம் - மேருமலையின் தென்பாலுள்ள நாவல் மரத்தின் கனிச்சாற்றிலிருந்து உண்டாயபொன்.

2 தன்றிசைக் கடலென்றது, தாம்பிரபன்னிநதி கலக்கப்பெற்ற கடலை ; அந்தப்பாகம் கொற்கைத் துறையென்று வழங்கும்.

3 இதற்கு உரை கிடைத்திலது ; காவிரியால் உண்டாகிய பொருள்களும் சிங்கள தேசத்திலிருந்து உண்டாகிய நுகர் பொருள்களு மென்க.