செழுநகர் வரைப்பிற் (183) புரவி முதலியன ஈண்டித் (192) துஞ்சி (195) மயங்கிய மறுகு (193) என்க.
இனி , இனிது துஞ்சி (195) மீன் பிறழவும் (197) மா ஈண்டவும் (198) என மேலே கூட்டுவாருமுளர்.
196-217. [கிளைகலித்துப் பகைபேணாது, வலைஞர்முன்றின் மீன்பிறழவும், விலைஞர்குரம்பை மாவீண்டவுங், கொலைகடிந்துங் களவுநீக்கியு, மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு, நல்லானொடு பகடோம்பியு, நான்மறையோர் புகழ்பரப்பியும், பண்ணிய மட்டியும் பசும் பதங் கொடுத்தும், புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக், கொடுமேழி நசையுழவர், நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர், வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவு மொப்ப நாடிக், கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது, பல்பண்டம் பகர்ந்துவீசுந், தொல்கொண்டித் துவன்றிருக்கைப், பல்லாயமொடு பதிபழகி , வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற், சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு, மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப், புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும் :]
பழி தீர் தேஎத்து (216) முது வாய் ஒக்கல் (214) சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு (215) - குற்றமற்ற பிறதேசங்களிலே அறிவு வாய்த்த சுற்றத்தினையுடைய விழாக்களை நிகழ்த்தின பழைய ஊரிலுள்ளார் ஈண்டுவந்து குடியேறினாற் போல,
" செலவினும் வரவினும் " (தொல். கிளவி. சூ. 28.) என்னுஞ் சூத்திரத்தாற் சென்றென்பது வந்தென்னும் பொருடந்தது.
1 வேறு வேறு உயர்ந்த (214) புலம் பெயர் மாக்கள் (217) - பலபல சாதிகளா யுயர்ந்த தத்தம் நிலத்தைக் கைவிட்டுப் போந்த மாக்கள்,
பலமொழி பெருகிய (216) மாக்கள் (217) - பல பாடைமிக்க மாக்கள், மாக்களென்றார், 2 ஐயறிவே யுடையராதலின் ; என்றது சோனகர் சீனர் முதலியோரை.
1 " கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் , கலந்திருந் துறையுமிலங்குநீர்ப் பரப்பும் ", " மொழிபெயர் தேத்தோ ரொழியா விளக்கமும் " (சிலப். 5 : 11 - 2, 6 : 143)
2 ஐயறிவு - ஐம்பொறி யுணர்வு ; மாக்கள் மனனுணர்வின்றி ஐம்பொறியுணர்வையே உடைய விலங்குபோல்வார் ; இதனை, " மாவு மாக்களு மையறி வினவே", " மக்க டாமே யாறறி வுயிரே " (32, 33) என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களானுணர்க.