554

வடு அஞ்சி வாய் மொழிந்து (208) - தம்குடிக்கு வடுவாமென்றஞ்சி மெய்யே சொல்லி,

கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது (210) - தாம் கொள்ளுஞ் சரக்கையும் தாம்கொடுக்கும்பொருட்கு மிகையாகக் கொள்ளாது தாம் கொடுக்குஞ் சரக்கையும் தாம்வாங்கும் பொருட்குக் குறையாகக்கொடாமல்,

பகர்ந்து வீசும் (211) - இலாபத்தை வெளியாகச் சொல்லிக் கொடுக்கும்,

தொல் கொண்டி (212) - பழைதாகிய கொள்ளையினையும்,

கொள்ளையென்றார், இந்நெறியை நடத்தினாரிடத்தல்லது பொருட்டிரள் உண்டாகாதென்றற்கு.

தண்ணிழல் வாழ்க்கையினையும் (204) தொல் கொண்டியினையும் (212) உடைய நன்னெஞ்சினோ (207) ரென்க.

துவன்று இருக்கை (212) - நெருங்கின குடியிருப்பினையும்,

காவிரி (6) புனல்பரந்து பொன்கொழிக்கும் (7) பல்லூர் நெடுஞ்சோணாட்டிற் (28) கழிசூழ்படப்பையினையும் (32) தண்டலையினையும் (33) பொய்கைகளையும் (38) ஏரிகளையும் (39) திண்காப்பினையும் (41) கோயிலைமாசூட்டுதற்குக் காரணமான (50) அட்டிலினையும் (43) சாலையினையும் (52) பள்ளியினையும் (53) குயில் (55) துச்சிற்சேக்கைக்குக் காரணமான (58) தாழ்காவினையும் (53) பாக்கங்களையும் (27) புறச்சேரியினையும் (76) முன்றிலினையும் (141) விழவறா ஆவணத்தையும் (158) மாக்கள் கலந்து இனிதுறையும் (217) வளந்தலை மயங்கிய மறுகுகளையும் (193) நன்னெஞ்சினோர் (207) துவன்றிருக்கை (212) யினையுமுடைய பட்டின (218) மெனவினைமுடிக்க.

218. முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும் - குறைவு படாத தலைமையினையுடைய பட்டினத்தை எனக்கு உரித்தாகப் பெறுவேனாயினும்,

219. வார் இரு கூந்தல் வயங்கு இழை ஒழிய - நீண்ட கரிய கூந்தலையுடைய விளங்குகின்ற பூணினையுடையாள் ஈண்டுப் பிரிந்திருப்ப,

220. வாரேன் வாழிய நெஞ்சே - யான் நின்னோடு கூடவாரேன் ; நெஞ்சே, போய்வாழ்வாயாக ;

" அளிநிலை பொறாஅது " (5) என்னும் அகப்பட்டால் போக்கிற்கு ஒருப்படாமல் நிற்குங் குறிப்புணர்க.

220 - 21. கூர் உகிர் கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு - கூரிய உகிரினையும் வளைந்தவரிகளையுமுடைய புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து வளர்ந்தாற்போல,