57

1 - திருமுருகாற்றுப்படை

மருப்பு (157) முதலியவற்றையுடைய யானை (158) யென்க.

160-61. நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை - நான்காகிய பெரிய தெய்வத்தையுடைய நன்றாகிய ஊர்கள் நிலைபெற்ற உலகத்தைக் காக்கும் ஒரு தொழிலையே விரும்பிய கோட்பாட்டையுடைய செல்வன் (151) என முன்னே கூட்டித் திருமாலுக்கு அடையாக்குக.

1நாற்பெருந் தெய்வமாவன : இந்திரன், யமன், வருணன்,2சோமனென்னும் தெய்வங்கள்.

162. பலர் புகழ் மூவரும் தலைவராக - பலரும் புகழ்கின்ற அயன்அரி அரனென்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்புபோல நிகழ்த்தித் தலைவராகவேண்டி,

என்றது : பிள்ளையார் அயனைச்சபித்தலின், அயன் படைத்தற்றொழிலைத் தவிரவே ஏனையிருவர்க்கும் காத்தற்றொழிலும் அழித்தற்றொழிலும் இன்றாமாகலின் மூவரும் தத்தமக்குரிய தொழில்களைப் பெற்றுத் தலைவராகவென்றார்.

163-5. [3ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித்,4தாமரை பயந்த தாவி லூழி, நான்முக வொருவற் சுட்டி:]

ஞாலம் தன்னில் தோன்றி5ஏம் உறு நான்முக ஒருவன் சுட்டி - பிள்ளையார் சபித்தலாலே மண்ணிடத்தே தோன்றி மயக்கமுறுகின்ற நான்கு முகத்தையுடைய அயனைப் பழைய நிலையிலே நிறுத்தக் கருதி,

தாமரை பயந்த ஊழி தா இல் ஒருவன் - திருமாலுடைய திருவுந்தித் தாமரை பெற்ற ஊழிகடோறும் தன் படைத்தற்றொழிலில் வருத்தமில்லாத ஒருவன் (165),


1.நாற்பெருந் தெய்வம் - அந்தணர் தெய்வம், அரையர்தெய்வம், வசியர் தெய்வம், சூத்திரர்தெய்வம்; என்பதைச் சிலப்பதிகாரத்துக் (அழற்படுகாதையிற்) கண்டுகொள்க (வேறுரை)

2.சோமன் - குபேரன்.

3.ஏமுறு ஞாலம் - ஐயம் மிக உடைத்தாய பூமி (வேறுரை)

4.தாமரை பயந்த தாவி லூழி நான்முகவொருவற் சுட்டி தோன்றி - தாமரைப்பூவின் கட்டோன்றி கேடில்லாத காலத்தினையுடைய நான் முகனாகிய அயனுக்காக முன் சொன்ன மூவரும் பூமியின்கண் வந்து தோன்றி; அது, பிள்ளையார் அயனைச் சிறையிடுகையில் அவர் எழுந்தருளியிருக்கும் திருவாவினன்குடியிற் சென்று அயனை விடுவிக்கப் பூமியின்கண் வந்ததெனக் கொள்க (வேறுரை)

5. "ஏமுறுகடுந்திண்டேர் - பகைவர் மயக்கமுறுதற்குக் காரணமான கடிய திண்ணிய தேர்" (கலித். 27 : 25, ந.)