586
பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை
யருங்குறும் பெறிந்த கானவ ருவகை
திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென
320 நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை யயருங் குரவை
நல்லெழி னெடுந்தே ரியவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
325 நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்
துரவுச் சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
யொலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறுங்
கிளிகடி மகளிர் விளிபடு பூச
330லினத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தி னூறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
335நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை


316 - 7. மால்பிலேறித் தேன் கொள்ளுதல் : "பெருந்தேன் கண்படு வரையின் முதுமால், பறியா தேறிய மடவோன் போல " (குறுந். 273 : 5 -6) ; " வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத், தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங், கானக னாடன் மகன் " (கலித். 39 : 8 - 10) ; " ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும், வேய்விளையாடும் வெற்பா "(திருச்சிற். 133)

319. மலைபடு. 467.

318 - 22. முருகு. 194 - 7, குறிப்புரை.

324. குறுந். 42 : 2 - 3, ஒப்பு.

323 - 4. அருவியொலிக்குத் தேரொலி : " குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக " (குறுந். 189 : 2 ) ; " கற்பா லருவியி னொலிக்கு நற்றேர் " (அகநா. 184 : 17) 

326. (பி-ம்.) ' பரூஉவெளில் '

325 - 7. முல்லை. 35 - 6 ; சீவக. 1834.

328 - 9. தட்டை : குறிஞ்சி. 43 - 4, குறிப்புரை ; " கடுங்கழைத் தட்டைக் குன்றவர் மகளிர் காவலும் " (திருக்காளத்தி. 2 : 4)

331. மலைபடு. 406.