59

1 - திருமுருகாற்றுப்படை

பைசாசகணமும் தாராகணமும், நாகரும், ஆகாயவாசிகளும், போகபூமி யோருமெனவிவர்; இதற்குப்1பிறவாறு முரைப்பர்.

பெறீஇயர் : தொழிற் பெயர்.

169. மீன் பூத்தன்ன தோன்றலர் - உடுக்கள் பொலிவுபெற்றுத் தோன்றினாலொத்த தோற்றத்தையுடையராய்,

169 - 70. மீன் சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர் - மீன்களுலாவுகின்ற விடத்தைச் சேர்ந்துகாற்று எழுந்தாலொத்த செலவினையுடையராய்,

170 - 71. வளி இடை தீ எழுந்தன்ன திறலினர் - காற்றிடத்தே நெருப்பெழுந்தாலொத்த வலியினையுடையராய்,

171 - 2. தீ பட உரும் இடித்தன்ன குரலினர் - நெருப்புப் பிறக்க உருமேறு இடித்தாற் போன்ற குரலினையுடையராய்,

இவை வினையெச்சமுற்று.

172 - 3. [ விழுமிய, வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மார் :] தம் விழுமிய பெறுமுறை குறை உறு மருங்கில் கொண்மார் -2தம்முடைய சீரிய படைத்தல் காத்தல் அழித்தலென்னும் தொழில்களைப் பண்டுபோலப் பெறுமுறைமையினைக் குறைவேண்டி நின்று பெறுங்கூற்றாலே முடித்துக் கோடற்கு,

174. அந்தரம் கொட்பினர் - ஆகாயத்தே சுழற்சியினையுடையராய், [வந்துடன் காண :] உடன் வந்து காண - சேரவந்து காணும் படியாக,

175. தா இல் கொள்கை மடந்தையொடு - வருத்தமில்லாத3அருட்கற்பினையுடைய தெய்வயானையாருடன்,


1.புறநானூறு, கடவுள் வாழ்த்து உரையில் பதினெண்கணங்களை இங்குக் கூறப்பட்டவற்றிற்குப் பெரும்பாலும் ஒப்பவே விரிப்பர்; "கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்", "காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகண, மேந்துபுகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போகபூமி யோருடனே, யாகாச வாசிகளா வார் " (சிலப். 5; 176-8, அடியார், மேற்.); பிங்கலந்தை முதலிய நிகண்டுகளில் இவ்வாறே கூறப்பெற்றிருக்கின்றன. "பேயும் பூதமும் பாம்புமீறாகிய பதினெண்கணம்" (தொல். பொருள். சூ. 256) என்று பேராசிரியரும், "பதினெண்கணங்களாவன தேவகணம் பிதிரர்கணம் முதலியன" (136) என்று தக்கயாகப் பரணி உரையாசிரியரும் எழுதுவர்.

2.162-ஆம் அடியின் உரையைப் பார்க்க.

3.6-ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.