பத்துப்பாட்டு 186. ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கியிருக்கின்ற கேட்டற்கரிய,1மறைய உச்சரிக்கப்படும் மந்திரத்தை, அது, 2"நமோகுமாராய" என்பதாம். 187. நா இயல் மருங்கில் நவில பாடி - நாப் புடைபெயரும் அளவிலே பயில உச்சரித்து, 188. விரை உறு நறு மலர் ஏந்தி - மணமிக்க நறிய பூவை எடுத்து, 188-9. பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் - பெரிது மகிழ்ந்து ஏரகமென்கின்ற ஊரிலே இருத்தலுமுரியன்; இருபிறப்பாளர் (182) புலரவுடீஇத் (184) தற்புகழ்ந்து (185) நறுமலரேந்திக் (188) கூப்பியகையராய் (185) நவிலப்பாடிப் (187) பொழுதறிந்து நுவல (182) அதற்குப் பெரிதுமகிழ்ந்து (188) ஏரகத்துறைதலும் உரியனென முடிக்க. 3ஏரகம் - மலைநாட்டகத் தொரு திருப்பதி. அதாஅன்று - அதுவன்றி. குன்றுதொறாடல் 190. 4பைங்கொடி - பச்சிலைக் கொடியாலே. எல்லாவற்றினும் பசுத்திருத்தலிற் பச்சிலையென்று பெயர்பெற்றது; பச்சிலை யென்னாது சினைவினை முதன்மேலேற்றிப் பைங்கொடி யென்றார். நறை காய் - நறுநாற்றத்தையுடைய காயை, அது சாதிக்காய்.
1. "ஐதுரைத்து" (முருகு. 228) என்பதற்கு, ‘தான் வழிபடுதற்குரிய மந்திரத்தைத் தோன்றாமல் உச்சரித்து' என்றெழுதிய உரை இங்கே கருதத்தக்கது. 2.(பி-ம்.) ‘நமக்குமாராய' 3. இதனைச் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை யென்னும் தலமென்று கொள்வர் அருணகிரிநாதர் முதலியோர்; "காவிரி யாற்றுக்கு ளேவரு, வளமைச் சோழநன் னாட்டுக்கு ளேரக, நகரிற் சீர்பெறு மோட்சத்தை யேதரு பெருமாளே", "யாவு மலைகொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்று மேரகமமர்ந்த பச்சை மயில்வீரா" (திருப்புகழ்); "சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமு நீங்கா விறைவன்" (சிலப். குன்றக்.) என்பதன் உரையினால் ஏரகம் சுவாமிமலையினும் வேறான ஒருதலமென்று அரும்பதவுரையாசிரியர் கருதுவதாகத் தெரிகின்றது. 4." பைங்கொடிப்படலை - பச்சிலைமாலை" (சிலப். 25 : 44, அரும்பத.)
|