644

380 - 83. முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பிப் கை பிணி விடாது பைபய கழிமின் - முன்போகின்றவன் முகத்திலடியாமல் வாங்கிவிட்ட கடியவிசையையுடைய திரண்டகோல் இனிய இசையைத் தன்னிடத்தே கொண்ட நல்ல யாழின் பத்தரையும் வலித்துக் கட்டின மார்ச்சனை செறிந்த முழவின்கண்ணையும் கெடாதபடி காத்து அவனைக் கரம்பிடித்துக் கோடலை விடாதே மெல்லமெல்லப் போவீர் ;

நாடுகாணனந்தலை (270) முதல் இத்துணையும் மலை (69) கூறிற்று. இவ்விடத்து யாற்றின்றன்மையும் (62) சேரக்கூறினார்.

384. களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல் - யானைகள் தம்மிற் சேர்ந்து பொருதாலொத்த ஒன்றினிடத்தே ஒன்று கூடிநெருங்கின கல்லிடத்தே,

385. தளி பொழி கானம் தலை தவ பலவே - மழைபெய்கின்ற காடுகள் அவ்விடத்து மிகப்பல ;

386 - 7. ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் - ஏவல் பொருந்தாத பகைவர் முதுகிட்ட அளவிலே தமது வெற்றிதோன்ற ஆரவாரித்தாராக, அதுபொறாமல் இவ்விடம் உயிர்கொடுத்தற்கு நல்லகாலமென்று மீண்டு உயிரைக்கொடுத்த நாணத்தையுடைய மறவருடைய,

388 - 9. செல்லா நல் இசை பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே - கெடாத நல்ல புகழினையுடைய பெயர்களை எழுதி நட்டகற்கள் முதுகிட்டுப்போனவரை இகழும் பலவழிகள் எண்ணுதல் மிகும்படி பலவாயிருக்கும் ;

390 - 91. இன்பு உறு முரற்கை நும் பாட்டு விருப்பாக தொன்று ஒழுகும் மரபின் நும் மருப்பு 1இகுத்து துனைமின் - இன்பமிகுகின்ற தாளத்தினையுடைய நும்முடைய பாட்டு அந்நடுகல்லில் தெய்வத்திற்கு விருப்பமாகப் பழமைநடக்கின்ற முறைமையினையுடைய நும்முடைய யாழைவாசித்து விரையப் போவிர் ;

மருப்பு : ஆகுபெயர்.

392 - 3. பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் சந்து நீவி புல் முடிந்து இடுமின் - முற்காலம் நன்மையறியாத தீயநிலத்தை வழியறியா மற்போய் மீண்டுவந்த புதியவர்கள் பின்வருகின்றவர்களும் அவ்வாறு போய் மீளாதபடி பலவழிகளுங்கூடின சந்தியைக் கையாலே துடைத்து அடையாளமாக ஊகம்புல்லை முடிந்திட்டு வைப்பீர் ;

நற்கு ; நன்கின் விகாரம்.


1 இகுத்தல் - ஒலித்தல் ; மலைபடு. 352, ந.