65

1 - திருமுருகாற்றுப்படை

கண்ணியினையும் கோதையினையும் சேர்த்தின கூந்தலினையும் மட1நடையினையுமுடைய மகளிரென்க.

இம்மகளிர் தன்னைச் சேவிக்கு மகளிர்.

206. செய்யன் - சிவந்தவன்,

206-7. சிவந்த ஆடையன் செ அரை செயலை தண் தளிர் துயல் வரும் காதினன் - சிவந்த ஆடையுடுத்துச் சிவந்த அரையினையுடைய அசோகிற் குளிர்ந்த தளிர் அசையுங்காது பொருந்தி,

208. கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் - கச்சைக் கட்டிக் கழலையணிந்து வெட்சிமாலையைச் சூடி,

209. குழலன் கோட்டன் 2குறு பல்லியத்தன் - குழலையூதிக் கொம்பைக் குறித்துச் சிறிய பல்லியங்களை எழுப்பி,

210 - 11. தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவலங்கொடியன் - கிடாயைப் பின்னிட்டு மயிலையேறிக் குற்றமில்லாத கோழிக்கொடியை உயர்த்து,

நெடியன் - தான் வேண்டிய வடிவுகோடலிற் பிள்ளையாயிராது3நெடுக வளர்ந்து,

தொடி அணி தோளன் - தோளிலேதொடியையணிந்து,

212. நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு - நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றையுடைய பாடு மகளிரோடே,

இவர்கள் தன்னைச் சேவித்துப்பாடும் மகளிர்.

213 - 4. [ குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல், மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்:]

மருங்கில் கட்டிய குறும்பொறி கொண்ட - இடையிலே இறுகக் கட்டிய உதரபந்தத்தின் மேலே உடுப்பதாக உட்கொண்ட,

4நிலன் நேர்பு நறு தண் சாயல் துகிலினன் - நாலவிட்டமையால் நிலத்தைப் பொருந்தி நறிய குளிர்ந்த மென்மையை உடைத்தாகிய துகிலினையுடுத்து,

215 - 6. [ முழுவுறழ் தடக்கையி னியல வேந்தி, மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து :]


1. மகளிர் நடைக்கு மயிலின் நடையை உவமை கூறுதலும் பண்டையாசிரியர் வழக்கம்; முருகு. 205-ஆம் அடியின் அடிக் குறிப்பைப் பார்க்க.

2. நெடும்பல்லியத்தனாரென்று ஒரு நல்லிசைப் புலவரின் பெயர் பழையநூல்களிற் காணப்படுகிறது ; இயங்கள் குறும்பல்லியம் நெடும் பல்லியமென இருவகைப்படுவனபோலும்.

3. "வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி" (முருகு. 288)

4 "நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்" (பெருங். 1-32 : 64)