652

471 - 3. வெள் நெல் அரிநர் தண்ணுமை வெரீஇ செ கண் எருமை இனம் பிரி ஒருத்தல் கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி - வெள்ளிய நெல்லையறுப்பார் கொட்டின பறையோசைக்கு வெருவிச் சிவந்த கண்ணையுடைய எருமைத்திரளைப் பிரிந்த கடா ஆரவாரிக்குஞ் செலவினையுடைய வலியோடே நும்மேல் விரைந்து வருதலைப் பேணி,

474 - 5. வனை கலம் திகிரியின் குமிழி சுழலும் துனை செலல் 1தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் - குயவன் வனைகின்ற மட்கலத்திற் சக்கரம்போலக் குமிழி சுழன்று தோன்றும் விரைந்த செலவினையுடைய வாய்த்தலையின் ஒழிவின்றி ஓடும் யாறு (476),

476 - 7. காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் யாணர் ஒருகரை கொண்டனிர் கழிமின் - காண்பார் விரும்பும் கட்கு இனிய சேயாற்றினது புதுவருவாயையுடைய ஒரு கரையை வழியாகக்கொண்டு போவிர் ;

வாயம் : ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டது (தொல். வினை. சூ. 41) சேயாறு : அவ்வியாற்றின் பெயர்.

478 - 87. [ நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற், பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ, வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத், தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென, விகழுநர் வெரூஉங் கவலை மறுகிற், கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு, மலையென மழையென மாட மோங்கித் , துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும், பனிவார் காவிற் பல்வண் டிமிரு, நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் :]

பல் வண்டு இமிரும் பனி வார் காவின் (486) - பலவண்டுகளொலிக்கும் குளிர்ந்த நெடிய பொழில்களையும்,

இகழுநர் வெரூஉம் (482) நிவந்து ஓங்கு வரைப்பின் (478) - நன்னனை இகழ்ந்திருப்பார் அஞ்சும் மிகவோங்குமதிலையும்,

சாறு என (481) கெழீஇ (479) கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு (483) வியல் இடம் பெறா விழு பெரு நியமத்து (480) - திருநாளென்னும்படி மாந்தர் பொருந்திக் கடலெனக் காரென ஒலிக்கும் ஆரவாரத்தோடே திரிதரற்கு அகன்ற இடம்பெறாத சீரிய பெரிய அங்காடித் தெருவினையும்,


1 " காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை, யோவிறந் தொலிக்கு மொலியே யல்லது " (சிலப். 10 : 108 - 9) என்றவிடத்து ஓவிறந்தென்பதற்கு ஓவுதல் தவிர்ந்தென்று அரும்பதவுரையாசிரியரும், வாய்த்தலையோ விறந்தொலிக்கு மொலியென்பதற்கு, ' வாய்த்தலைக்கிட்ட கதவின்மீதெழுந்து குதிக்கின்ற புதுப்புனலொலி ' என்று அடியார்க்கு நல்லாரும் எழுதிய உரைகள் இங்கே அறியற்பாலன.