அளியர் தாம் வெல் போர் சேஎய் பெருவிறல் மன்ற உள்ளி வந்தோர் என அமர்ந்து இனிதின் நோக்கி - இவ்வளிக்கத்தக்கவர் தாம் வெல்லும் போரைவல்ல முருகனைப்போலும் நன்னனைப் பரிசிலர்க்குக் கொற்றமாக நினைத்து வந்தோரென்று கருதி முகம்பொருந்தி இனிதாகப் பார்த்து, 496 - 7. [ விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப், பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட :] 1பரி புலம்பு அலைத்த வருத்தம் வீட அவர் விருந்து நும் இறை எதிர்கொள அவர் குறுகி - தரித்தலானுண்டான தனிமை வருந்தின வருத்தம் போம்படி அவ்விடத்தோர் விருந்தாய் நீங்கள் தங்குதலை எதிரேற்றுக் கொள்கையாலே அவர்களைச் சேர்ந்திருந்து, 498 - 500. [ எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத், தொழுதி போக வலிந்தகப் பட்ட, மடநடை யாமான் கயமுனிக் குழவி :] எரி கான்றன்ன பூ சினை மராஅத்து தொழுதிபோக வலிந்து அகப்பட்ட மடம் நடை ஆமான் குழவி - நெருப்பைக் கான்றாலொத்த பூங்கொம்புகளையுடைய மராமரத்திடத்தே கிடந்த இனமெல்லாங் கெட்டுப்போகப் போகமாட்டாது அகப்பட்ட மடப்பத்தையுடைய நடையையுடைய ஆமானினது குழவி, கயம் முனி குழவி - யானைக்கன்றிளையது, 501. ஊமை யெண்கின் குடாவடிக் குருளை :] எண்கின் குடாவடி ஊமை குருளை - கரடியின் வளைந்த அடியினையுடைய வாய் திறவாக்குட்டி, 502 - 3. மீமிசை கொண்ட கவர் பரி கொடு தாள் வரை வாழ்வருடைவல் தலை மாதகர் - முதுகிடத்தே கொண்ட நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினையுடைய வளைந்த காலையுடைய வரையிடத்தே வாழும் எண் கால்வருடையில் வலிய தலையினையுடைய பெரியகிடாய், இனி வருடையும் தகருமென வேறாகக் கூறலுமாம். 504. அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை - பாம்பினது வலிகளை யழித்த சிறிய கண்ணினையுடைய கீரி, 505 - 6. அளை செறி உழுவை கோள் உற வெறுத்த மடம் கண் மரையான் பெரு செவி குழவி - முழையிலே செறிந்திருந்த புலி பாய்தலுறுகையினாலே தன் உடலை வெறுத்த மடப்பத்தையுடைய கண்ணினையுடைய மரையானினது பெரிய செவியினையுடைய குழவி, 1" பரிபுலம்பினர் " (சிலப். 10 : 226) என்றவிடத்துச் செலவால் வருந்தினரென அரும்பதவுரையாசிரியரும், ' வழிவரும் வருத்தத்தால் மிகவும் வருந்தினர் ............பரி - மிகுதி ; பரிபுலம்பினர் ஒரு சொல்லுமாம் ' என அடியார்க்கு நல்லாரும் எழுதிய வுரைகள் இங்கே கருதற்குரியன.
|