பத்துப்பாட்டு 256. ஆல் கெழு கடவுள் புதல்வ - கல்லாலின் கீழிருந்த கடவளினுடைய புதல்வ, கடவுளரென உயர்திணையாய் நில்லாது கடவுளென்பது தெய்வமென்னும் பொருட்டாய் அஃறிணை முடிபுகொள்ளும் உயர்திணையாய் நிற்றலின், அஃறிணைப்பாற்பட்டு, "உணரக்கூறிய" (தொல். புள்ளி. சூ. 110) என்னும் புறனடையான் முடிந்தது. 256 - 7. 1மால் வரை மலை மகள் மகனே - பெருமையையுடைய மலையாகிய மலையரையன் மகளுடைய மகனே, வரை - மூங்கிலுமாம். மாற்றோர் கூற்றே - பகைவர்க்குக் கூற்றுவனே, 258. [ வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ :] வெற்றி கொற்றவை சிறுவ - வெற்றியை உலகத்திற்குக் கொடுக்கும் 2வன துர்க்கையினுடைய புதல்வ, வெல் போர் கொற்றவை - தான் வெல்லும்போரைச் செய்யும் கொற்றவை, என்றது, மகிடனைச் செற்றதனை. 259. இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி - பூணணிந்த தலைமையினையுடைய காடுகாளுடைய குழவி, காடுகிழாளென்பது இக்காலத்துக் 3 காடுகாளென மருவிற்று. அவளும் இறைவனுடைய சத்தியாகலின், அவளுடைய குழவியென்றார். 260. [வானோர் வணங்குவிற் றானைத் தலைவ :] வானோர் தானை தலைவ - தேவர்கள் படைத்தலைவ, என்றது, தேவசேனாபதி என்றதாம். வணங்கு வில் - வளையும் வில்லையும், வில்லையும் தேவராகிய தானையையுமுடைய தலைவவென்க. 261. மாலை மார்ப - 4இன்பத்திற்குரிய மாலையணிந்த மார்ப, 5நூல் அறி புலவ - எல்லா நூல்களையும் அறியும் புலவ,
1. மால்போலும் வரையினையுடைய மலையரையன் திருமகளார் மகனே (வேறுரை) 2. "கானநாடி - வனதுர்க்காதேவி" (தக்க. 54, உரை) 3. "கையார் வளைக்கைக் காடுகாளோடு முடனாய்க், கொய்யார் பொழிற் கோடியே கோயில் கொண்டாயே" (தே.) 4. இன்பத்திற்குரிய மாலை- கடப்பமாலை; முருகு.11-ஆம் அடியின் உரையைப் பார்க்க 5.வேதாகமங்கள் முதலிய பல சாத்திரங்களையும் ஓதாதுணர்த்தும் பண்டிதனே (வேறுரை)
|