பத்துப்பாட்டு பெயர் - பொருள். "பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய" (பதிற். 90 : 23) எனவும், "சொற்பெயர் நாட்டம்" (பதிற்.21 : 1) எனவும் வரும். பெரும்பொருளென்றது வீட்டினை. 270. [ நசையுநர்க் கார்த்து மிசைபே ராள :] நசையுநர்க்கு ஆர்த்தும் பேர் இசை ஆள - அவ்வீட்டைப் பெறவேண்டுமென்று நச்சிவந்தார்க்கு அதனை நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதலையுடையாய், பேரிசையென்று மாறுக. 271 - 2. [ அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் - மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்து :] அலந்தோர்க்கு அளிக்கும் சேஎய் - பிறரால் இடுக்கட்பட்டு வந்தோர்க்கு அருள்பண்ணும் சேய், மண்டு அமர் கடந்த வென்று ஆடு நின் அகலத்து பொலம்பூண் சேஎய் - மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்றடுகின்ற நினது மார்பிடத்தே பொன்னாற்செய்த பேரணிகலங்களையணிந்த சேயென்க. 273. பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேள் - இரந்துவந் தோரை வேண்டுவன கொடுத்துப் பாதுகாக்கும் உட்குதல் பொருந்திய நெடிய வேளே, 274. பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் - தேவரும் முனிவரும் ஏத்தும் பெரிய திருநாமத்தையுடைய தலைவனே, இயவுள் - கடவுளுமாம். 275 - 6. [ சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர்மிகு :]1போர் மிகு மொய்ம்பின் சூர் மருங்கு அறுத்த மதவலி - போர்த்தொழிலிலே மிகுகின்ற மொய்ம்பாலே சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின மதவலியென்னும் பெயரையுடையாய், பொருந - உவமிக்கப்படுவாய், பொருவப்படுமவன், பொருநனென நின்றது. குரிசில் - தலைவனே, 276 - 7. [ எனப்பல, யானறி யளவையி னேத்தி யானாது :] எனயான் அறி அளவையின் ஆனாது பல ஏத்தி - என்று யானறிந்து நினக்குக்கூறிய அளவாலே நீயும் அமையாதே பலவற்றையும் கூறிப்புகழ்ந்து, 278. நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் - நின் தன்மை யெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல்லுயிர்க்கும் அரிதாகையினாலே, 279. நின் அடி உள்ளி வந்தனென் - நின் திருவடியைப் பெற வேண்டுமென்று நினைந்துவந்தேன்;
1. போர்மிகுபொருந - போரை மிகப்பொர வல்லவனே (வேறுரை)
|