1 - திருமுருகாற்றுப்படை 297 - 8. வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - சிறு மூங்கிலினது பூவிடைத்தான அசைகின்ற கொம்பு தனிப்ப வேரைப்பிளந்து, 299 - 300. விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய - தேவருலகத்தைத் தீண்டுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றின் மண்டிலத்தைப்போல ஈ வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட, 300 - 301. நல் பல ஆசினி முது சுளை கலாவ - நன்றாகிய பல1ஆசினிகளினுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, 301 - 2. மீ மிசை நாகம் நறு மலர் உதிர - மலையினுச்சியிலுண்டான சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர, 302 - 3. யூகமொடு 2மா முகம் முசு கலை பனிப்ப - கருங்குரங்கோடே கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, "கலையென் காட்சி யுழைக்கு முரித்தே", "நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்" (தொல். மரபு. சூ. 45, 46) என்றார். 303 - 4. பூ நுதல் இரு பிடி குளிர்ப்ப வீசி - புகரையணிந்த மத்தகத்தையுடைய பெரிய பிடி குளிரும்படி வீசி, 304 - 5. பெரு களிறு முத்து உடை வான் கோடு தழீஇ - பெரிய யானையினுடைய முத்தையுடையவாகிய வெள்ளிய கொம்புகளை உள்ளடக்கி, 305 - 6. [ தத்துற்று, நன்பொன் மணிநிறங் கிளர :] நல் பொன் மணிநிறம் கிளர தத்துற்று - நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும் படி மேலே கொண்டு குதித்து, தத்துற்று - தத்துதலையுற்று. பொன் கொழியா - பொடியான பொன்னைத் தெள்ளி, 307 - 8. வாழை முழு முதல் துமிய தாழை இளநீர் விழு குலை உதிர தாக்கி - வாழையினது பெரிய முதல் துணியத் தெங்கினது இளநீரையுடைய சீரிய குலை உதிர அவ்விரண்டினையும் மோதி, 309. கறி கொடி கரு துணர் சாய - மிளகினது கொடியின் கரிய கொத்துக்கள் சாய, 309 - 11. [ பொறிப்புற, மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக், கோழி வயப்படை யிரிய :] பொறிபுற3மட நடை மஞ்ஞை கோழி
1. ஆசினி - ஈரப்பலா. 2. "மைபட் டன்ன மாமுக முசுக்கலை" (குறுந். 121 : 2) 3. மடப்பத்தினையும் நடையினையும் உடைய மயில்கள் (வேறுரை)
|