இரண்டாவது பதிப்பைக் காட்டிலும் இப்பகுதியில் ஏறக்குறைய 300 பக்கங்கள் அதிகமாக இருப்பதனாலேயே இதிற் பல புதிய விஷயங்கள் சேர்க்கப் பெற்றுள்ளனவென்பதை அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். அவை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பயன்படுமென்பதை நான் எடுத்துச் சொல்வது மிகையாகும். என்னுடைய தமிழ்நூற் பரிசோதனை விஷயத்திலும் பதிப்பு விஷயத்திலும் அவ்வப்போது வேண்டிய பொருளுதவிசெய்து ஆதரித்துவரும் திருவாவடுதுறை யாதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்களையும், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமிகளவர்களையும், ஸ்ரீஸேதுஸமஸ்தானாதிபதிகளாகிய கௌரவம் பொருந்திய மகாராஜாராஜஸ்ரீ ஷண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி மகாராஜா அவர்களையும், கொழும்பு நகரத்து ஸ்ரீமான் டாக்டர் கு. ஸ்ரீகாந்த முதலியாரவர்களையும், பெரும்பன்றியூர் ஸ்ரீமான் A. M. பெரியசாமி முத்தைய உடையாரவர்களையும் ஒரு பொழுதும் மறவேன். அவர்களுடைய உதவிகள் அவ்வப்போது எனக்கு மிக்க ஊக்கத்தை அளித்துவருகின்றன. என்னுடைய இளைய சகோதரர் சிரஞ்சீவி வே. சுந்தரேசையர் தாம் பத்துப்பாட்டைப் படித்துவருங்காலத்தில் செய்து வைத்திருந்த சில குறிப்புக்களை இப்பதிப்பிற்கு உபயோகமாகும்படி கொடுத்தனர். இப்பதிப்பு ஆராயப்பெற்று வந்த காலத்தும் அச்சிடப்பெற்று வந்த காலத்தும் உடனிருந்து குறிப்பெழுதுதல், ஒப்புநோக்குதல், பிரதிசெய்தல் முதலிய உதவிகளைப் புரிந்து வந்தவர்கள் சிகந்தராபாத் மாபூப் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் சு. கோதண்டராமையரும், சென்னை, கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், மோகனூர்த் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி கி. வா. ஜகந்நாத ஐயரும் ஆவர். இவர்களுள் ஜகந்நாத ஐயர் இதற்காக எடுத்துக்கொண்ட உழைப்பும் செய்த வேலையும் மிக அதிகம். இவர்களுக்கு விசேஷமான பயனை அளிக்கும்படி தமிழ்த் தெய்வத்தைப் பிரார்த்திக்கின்றேன். பல தமிழ் அபிமானிகள் விரும்பியபடி இப்பத்துப்பாட்டின் மூலத்தை மட்டும் இன்றியமையாத ஆராய்ச்சிக்குறிப்பு அரும்பத அகராதியுடன் தனிப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். முன்பு யான் பதிப்பித்துள்ள மற்றப் பழைய நூல்களையும் இங்ஙனமே வெளியிடக் கருதியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னமேயே இப்பதிப்பு வெளிவந்திருக்க வேண்டும். திடீரென்று எனக்கு நேர்ந்த தேக அசௌக்கியத்தால் தாமதித்து வெளியிடலாயிற்று. இப்புத்தகத்தை அச்சிடும் விஷயத்தில் கேஸரி அச்சுக்கூடத்தார் செய்த உதவி மிகப் பாராட்டத்தக்கது. |