திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்" எனத் திருமாலையும், "காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப், பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்" என அவர் பாம்பணையிற் கண்வளர்ந்தருளும் திருவெஃகாவையும், " நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ், நான்முகவொருவற் பயந்த பல்லிதழ்த், தாமரைப்பொகுட்டு" என அவரது திருவுந்திக் கமலத்தையும் பாராட்டிக் கூறியிருத்தலின் இவர் திருமாலிடத்து அன்புடையவரென்று சொல்லுவதற்கு இடமுண்டு. இந்த இரண்டு பாட்டுக்களும், எட்டுத் தொகையுட் குறுந்தொகைக் கண்ணதாகிய, "நெடுநீராம்பல்" என்னும் 352-ஆம் செய்யுளும், அகநானூற்றின் கண்ணதாகிய, "வயங்குமணி பொருத" என்னும் 167-ஆம் செய்யுளும் இவரால் இயற்றப்பெற்றவை யென்று இப்பொழுது தெரிகின்றன. பெரும்பாணாற்றுப்படைத் தலைவனாகிய தொண்டைமானிளந்திரையனும், பட்டினப்பாலையின் தலைவனாகிய சோழன் கரிகாற்பெருவளத்தானும், இவரை ஆதரித்தவர்கள். சோழன் கரிகாற்பெருவளத்தான் பட்டினப்பாலையைக் கேட்டு மகிழ்ந்து பதினாறு நூறாயிரம் பொன் இவருக்குப் பரிசளித்தானென்று தெரிகிறது. இவர் பலசாதியார்களுடைய ஒழுக்கங்களையும் அவர்கள் இருக்கும் குடியிருப்பினையும் மிகச் சுவைபடத் தெரிவிக்கும் ஆற்றலுடையவர். பெரும்பாணாற்றுப்படையில் உமணர், எயினர், எயிற்றியர், ஆயர், ஆய்ச்சியர், உழவர், வலைஞர், அந்தணமகளிர் முதலியோரைப்பற்றியும், பட்டினப்பாலையிற் பரதவர் வணிகர், முதலியோரைப்பற்றியும் கூறும் பகுதிகள் இக்கருத்தைப் புலப்படுத்தும். நீர்ப்பெயறென்னும் ஊருக்கு அருகுள்ள பட்டினம், காவிரிப்பூம்பட்டினமென்னும் இரண்டு கடற்றுறை நகர்களைப்பற்றிக் கூறுவனவற்றுட் பல பகுதிகள் ஒன்றிய கருத்துள்ளன; கப்பல்கள் குதிரைகளையும் வடநாட்டுப் பொருள்களையும் கொண்டு வந்தனவென்பதும், பண்டசாலைகளைக் காவலாளர் காத்து வந்தனரென்பதும், அப்பண்டசாலைகளின் முற்றங்களில் மேழகக்கிடாயும் நாயும், திரிந்தனவென்பதும், பரதவர் தெருவிலுள்ள மாடங்களில் அழகிய மகளிர் இருந்து விளையாடினரென்பதும், அத்தெருவிற்கட்கடைகள் இருந்தனவென்பதும், அவற்றின் முற்றத்தில் மலர்கள் தூவப்பட்டிருந்தன வென்பதும், பலரும் செல்லும் வாயிலும் கள்விற்பதைத் தெரிவிக்கும் கொடியும் அவற்றில் அமைந்து இருந்தன வென்பதும், மாடங்களில் ஏற்றப்பட்ட விளக்குக்கள் கலங்களிற் செல்வார்க்கு அடையாளமாக இருந்தனவென்பதும் பெரும்பாணாற்றுப் படையிலும் பட்டினப்பாலையிலும் காணப்படுகின்றன. பாழ்பட்ட நாடுகளைப்பற்றி இவர் கூறும்பகுதி படிப்போர்க்குக் கழிபேரிரக்கத்தை உண்டாக்கும். "மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட" (பெரும்பாண்.423) எனச் சுருக்கிக் கூறிய இவர் பட்டினப்பாலையில், "பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்து"(255) என்பது முதலிய அடிகளால் விரித்துக் கூறுகின்றார். மெழுகப்பட்டதும் கடவுள் இருப்பதுமாகிய இடம் பாழாயிருத்தல், கட்டி |