ix


முதலில் வாங்கிப் படித்தார். 1 பாட்டுக்களை நெட்டுருப்பண்ணும் ஆற்றல் இவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தமையால், இவர் எதைப் படித்தபோதிலும் நெட்டுருப் பண்ணிக்கொண்டே வந்தார். இவர் தமிழ் படிக்க வேண்டும் என்னும் அவாவினால் "ஏடது கைவிடேல்" என்பதற்கேற்ப எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பார். இச் செயல், அத்தையார் சேசி அம்மாளுக்கு மாத்திரம் அருவருப்பாயிருந்தது. இவர் தமிழ் படிப்பதில் காலம் போக்குவதை அவர் அடிக்கடி கடிந்து வந்தார்; ஆகவே அத்தையார் அறியாதிருக்க, இவர் வயல் வரம்புகளிலும் கருவேல மரத்தின் கீழுமிருந்து கல்வி கற்பவராயினர். தம் மருமகன் கல்வியிற் காலம் போக்குவது குடும்ப காரியத்திற்கு இடையூறாகும் என்று கருதினர்போலும்.

காவியப் பயிற்சியும் கவிவன்மையும்

    ஆசிரியர் உதவியின்றித் தமிழ்நூல்களைத் தாமே கற்றுத் தேர்ச்சிபெற்ற இவர் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். "ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும், காற்கூறல்லது பற்றல னாகும்" என்று பாயிரம் கூறுமாயின், ஆசானின்றியே கற்ற ஐயரிடத்தில் ஐயங்கள் முற்றும் இல்லாமல் இரா. ஐயந்தீரப் பொருளை உணர்த்தும் ஆசிரியர் ஒருவரை அவாவிநின்றார். இக்குறை தீருங்காலம் வாய்த்தது. திருமறைக்காட்டில் பொன்னம்பலப் பிள்ளை என்னும் புலவர் தலைமணி வீற்றிருந்தனர். இவர் யாழப்பாணம் நல்லூர், ஆறுமுகநாவலர் அவர்கள் மருகரும், மாணவரும் ஆவர். இளம்பூரணம் நச்சினார்க்கினியம் முதலிய உரைகளோடு தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் பலமுறை ஆராய்ந்து கற்றவர். அவற்றைப் பல மாணவர்க்கும் கற்பித்தவர். பரிமேலழகர் உரையை ஒருபோதும் மறவாதவர். பாரதத்தில் ஆதி பருவத்திற்கும், மயூரகிரிப் புராணத்திற்கும் உரை செய்தவர்.