(து - ம்,)என்பது, தோழியை இரந்து குறைபெறாது வருந்தி மடலே பொருளென மதித்த தலைமகன் மீட்டும் தோழிகேட் டிரங்கிக் குறைமுடிக்கு மாற்றானே தன் நெஞ்சை நோக்கி 'மாயோளால் வருந்திய நெஞ்சே, மடற்பரியுடையாய், கதிர்வெயில் எறியொழியுமளவும் இம்மரத்தின் கீழே சிறிதுபொழுது இரங்கியிருந்து பின்பு செல்வாயாக' வென்று வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "மெய்தொட்டுப் பயிறல்" (தொல். கள. 11) என்னும் நூற்பாவின்கண் வரும் "தோழியைக் குறையுறும் பகுதியும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| வில்லாப் பூவின் கண்ணி சூடி |
| நல்லே முறுவலெனப் பல்லூர் திரிதரும் |
| நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே |
| கடனறி மன்னர் குடைநிழல் போலப் |
5 | பெருந்தண் என்ற மரன்நிழல் சிறிதிழிந்து |
| இருந்தனை சென்மோ வழங்குக சுடரென |
| அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் |
| நல்லேம் என்னுங் கிளவி வல்லோன் |
| எழுதி யன்ன காண்டகு வனப்பின் |
10 | ஐயள் மாயோள் அணங்கிய |
| மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே. |
(சொ - ள்.) அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் நல்லேம் என்னும் கிளவி வல்லோன் - அன்போடு நெருங்கிய மகிழ்ச்சியையுடைய மாந்தர் நெருங்கிக்கூறு மீக்கூற்றால் யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரந்தீட்டுவதில் வல்ல ஓவியன்; எழுதி அன்ன காண் தகு வனப்பின் ஐயள் மாயோள் அணங்கிய - எழுதிவைத்தாலொத்த காட்சி தக்க அழகினையுடைய மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவளால் வருத்தம் ஏறட்டுக்கொண்ட; மையல் நெஞ்சம் - மயக்கத்தையுடைய நெஞ்சமே!; வில்லாப்பூவின் கண்ணி சூடி - விலைக்கு விற்றற்கியலாத பூளைமலரையும் உழிஞைப்பூவையும் எருக்கம்பூவையும் ஆவிரம்பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி; நல் ஏம் உறுவல் எனப் பல் ஊர் திரிதரும் - யான் நல்ல பித்தேறினேன் என்னும் படி பல ஊர்களிலுஞ் சென்று திரிகின்ற; நெடு மா பெண்ணை