(து - ம்.) என்பது, தலைமகன் அடைந்த குறையைத் தீர்க்குமாறு உடன்பட்ட தோழி தலைமகளிடஞ் சென்று, அத் தலைவி தன்முகம் நோக்கி மகிழ்ந்து வினாவுதல் நிமித்தமாக உரையாடுகின்றவள், "ஒரு தலைவன் ஊர்கின்ற மடல்மாவை யீர்த்து நம்முடைய மறுகின்கண் வரும் மாக்களாகிய மயக்கமுற்ற இவர்கள் உலகவியல் பறிந்திருப்பின் "இத் தோழியர் தலைவிக்கு வேறாவார்" என்று எம்முடன் சொல்லாடப் படுதல் எவ்வண்ணமாகு மென்று சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "குறைந்து அவட்படரினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
துறை : (2) பின்னின்ற தலைமகன் தோழிகேட்பத் தலைமகளை ஒம்படுத்ததூஉமாம்.
(து - ம்.) என்பது, "தன்குறையைத் தோழிபாலுரைத்த தலைமகன் மீட்டும் தான்கூறுவதனை அவள்கேட்டு விரைந்து குறைமுடிக்குமாற்றானே "யான் ஊர்கின்ற பனைமாவை யீர்த்து மறுகின்வரு மக்களாகிய மயக்கமுடைய இவர்கள் உலகவியலறிந்திருப்பின் "இத்தோழியர் தலைவிக்கு வேறாதலுடையார்" என்று எம்முடன் சொல்லுதல் எவ்வண்ணமாகு" மென்று கூறியதுமாகும்.
(இ - ம்.) இதற்கு," தோழி குறைஅவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க. அன்றி "மடன்மாக் கூறும் இடனுமா ருண்டே" (மேற்படி) என்னும் விதிகோடலுமாம்.
துறை : (2) தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை.
(உரை எல்லாவற்றிற்கு மொக்கும்.) (இ - ம்.) இதற்கு,"பரிவுற்று மெலியினும்" (தொல். கள. 12) என்னும் விதிகொள்க.
| சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக் |
| குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி |
| உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன் |
| மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள் |
5 | பெரிதுஞ் சான்றோர் மன்ற விசிபிணி |
| முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண் |
| ஊரேம் என்னுமிப் பேரேம் உறுநர் |
| தாமே ஒப்புரவு அறியின் தேமொழிக் |
| கயலேர் உண்கட் குறுமகட்கு |
10 | அயலோர் ஆகலென்று எம்மொடு படலே. |