(து - ம்.) என்பது, உடன்போக்கிற் கொண்டுசெல்லுந் தலைமகன் மடந்தாய், ஊர் தோன்கின்றது உங்கே பாராய் : சிறிது நனி விரைந்து செல்லுவாயாக என ஆற்றிக்கொண்டு செல்லாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஒன்றாத் தமரினும்" (தொல். அகத். 41) எனவரும் நூற்பாவின்கண் "கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட, அப்பாற்பட்ட வொருதிறத் தானும்" என்பதனால் அமைத்துக்கொள்க.
துறை : (2) உடன்போய் மறுத்தராநின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதுமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை. (ஊரெனப் பொதுப்படக் கூறியிருத்தலால் உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதுவுமது.
| பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு |
| வான்தளி பொழிந்த காண்பின் காலை |
| அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும் |
| மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலநின் |
5 | வீபெய் கூந்தல் வீசுவளி உளர |
| ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே |
| வேய்பயில் இறும்பின் கோவலர் யாத்த |
| ஆபூண் தெண்மணி இயம்பும் |
| உதுக்காண் தோன்றுமெம் சிறுநல் ஊரே. |