பக்கம் எண் :


529

வேண்டும் என்று அவர் உடன்படுமாறு உள் யாதுமில்லாத பொய்ம்மொழியைச் சொல்லவில்லையோ? சொல்லியிருப்பின் இங்கு வந்திராய்; என்றாளாகக் கோடல் நன்று. இவ்வாறன்றி "அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ" எனல் நாகரிகமன்மையும் தெளிக.

(310)
  
    திணை : நெய்தல்.

    துறை : இஃது, அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.

    (து - ம்.) என்பது, அயலார் பழிச் சொல்லெடுத்தலால் அது பொறாது வருந்திய தலைமகளைத் தோழி நோக்கி 'நம்மூர் எல்லா வளனுமுடையது; துறையும் இனிமையுடையது; நம் காதலரின் தேரொலி கேட்டல் அரிதானமையின் நம்மூர்ச் சோலைக்கு அஃது ஒன்றுமே பழியுடையதா யிராநின்றது; அவர் வந்து கூடின் அதுவும் மிக நல்லதாயிருக்கு'மென்று கூறி ஆற்றுவிப்பது.

    (இ - ம்.) இதற்கு, "என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி 
    
இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே 
    
வறப்பின், மாநீர் முண்டகந் தாஅய்ச் சேறுபுலர்ந்து 
    
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும் 
5
அழியா மரபின்நம் மூதூர் நன்றே 
    
கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கிச் 
    
சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே 
    
ஒன்றே தோழிநங் கானலது பழியே 
    
கருங்கோட்டுப் புன்னை மலரில்தா தருந்தி 
10
இருங்களிப் பிரசம் ஊதஅவர் 
    
நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிதே. 

    (சொ - ள்.) தோழி அழியா மரபின் நம் மூதூர் - தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; பெயின் விடுஉழைமான் இனம் வெறுப்பத் தோன்றி இருங்கதிர் நெல்லின் யாணர் அது - மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; வறப்பின் மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து இருங் கழிச் செறுவின் வெள்உப்பு