பக்கம் எண் :


531


நாளிலேயும் நடுங்கும் நம் காதலி கார்முதலாய நான்கு பருவங்களிலும் என்னபாடு படுவளோ என்று யான் வருந்துகின்றே'னென நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
நோகோ யானே நோம்என் நெஞ்சே 
    
பனிப்புதல் ஈங்கை அங்குழை வருடச் 
    
சிறைகுவிந் திருந்த பைதல்வெண் குருகு 
    
பார்வை வேட்டுவன் காழ்களைந் தருள 
5
மாரி நின்ற மையல் அற்சிரம் 
    
அமர்ந்தனள் உழையம் ஆகவுந் தானே 
    
எதிர்த்த தித்தி முற்றா முலையள் 
    
கோடைத் திங்களும் பனிப்போள் 
    
வாடைப் பெரும்பனிக் கென்னள்கொல் எனவே. 

     (சொ - ள்.) நோம் என் நெஞ்சே - பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; எதிர்த்த தித்தி முற்றா முலையள் உழையம் ஆகவும் கோடைத் திங்களும் பனிப்போள் - மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்தேமாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச் சிறை குவிந்து இருந்த பைதல் வெண்குருகு பார்வை வேட்டுவன் காழ்களைந்து அருள நின்ற மாரி - குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; மையல் அற்சிரம் - பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைப் பெரும்பனிக்கு - வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; அமர்ந்தனள் என்னள் கொல் - தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோகு - யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று; எ - று.

     (வி - ம்.) அற்சிரம் - கூதிர்ப்பருவம். பனியெனப் பொதுப்படக் கூறினமையின் முன்பனி, பின்பனியாகிய இருவகைப் பருவமுங்கொள்க. காழ் - பிணிப்பு. உழையம் : நெஞ்சையுளப்படுத்தியது.