(து - ம்,) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிதலாலே வருந்திய தலைமகளைத் தோழி நெருங்கி 'அவரை நாம் கருதும் போதெல்லாம் சுவரின்கண்ணே பல்லி சொல்லநின்றதாதலின், அகன்று போகிய காதலர் இன்னே வந்து நின்னை முயங்குவர் போலுமென்று தோன்றுகின்றது; நினது துயரம் நீங்குவாய்கா'ணென வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.
| மழைதொழில் உலந்து மாவிசும்பு உகந்தெனக் |
| கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப் |
| பரலவல் ஊறற் சிறுநீர் மருங்கில் |
| பூநுதல் யானையொடு புலிபொருது உண்ணுஞ் |
5 | சுரன்இறந்து அரிய என்னார் உரனழிந்து |
| உண்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி |
| அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து |
| திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் |
| நீங்குக மாதோநின் அவலம் ஓங்குமிசை |
10 | உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி |
| நயவரு குரல பல்லி |
| நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே. |
(சொ - ள்.) ஓங்கு மிசை உயர் புகழ் நல்இல் - (தோழீ!) உயர்ந்த இடத்தில் உயர்ந்த புகழையுடைய நல்லவீட்டின் கண்ணே; நள் என் யாமத்து உள்ளுதொறும் - செறிந்த இரவு நடு யாமத்தில் நாம் நம் காதலரை நினைக்குந்தோறும்; நயவருகுரல பல்லி - இனிமையான குரலையுடைய பல்லி; ஒள் சுவர்ப் பொருந்திப்படும் - ஒள்ளிய சுவரிலே