(து - ம்.) என்பது, பொருள்வயிற்சென்ற தலைவன் மீண்டுவரும் பொழுது அதனுடன் வந்த இளைஞர் முதலானோர் முன்னரே மனையகம் புகுந்து தலைவன் வருகையைத் தெரிவிப்பக் கேட்ட தோழி, தலைமகளை நெருங்கிச் "சுரத்தின் கண்ணே சென்ற நங்காதலர் மீண்டுவந்தெய்தினர்காண்; ஆதலின் அவரும் நீயும் நெடுங்காலம் வாழ்க"வென உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ |
| நெடுங்கால் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி |
| சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும் |
| நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் |
5 | கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர் |
| நெடும்பெருங் குன்ற நீந்தி நம்வயின் |
| வந்தனர் வாழி தோழி கையதை |
| செம்பொற் கழல்தொடி நோக்கி மாமகன் |
| கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும் |
10 | அவவுக்கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. |