அறிந்து விரைய மணம் புரிந்து கொள்ளுமாறு உள்ளுறையாலே தலைவி படுந் துன்பத்தைக் கூறி வெளிப்படையாலே கொண்கன் பிரிந்தனனென்று நொந்து யாவரிடத்தில் உரைப்பேனென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்.....................ஆங்கதன் தன்மையின் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாலமைத்துக் கொள்க.
| யார்க்குநொந் துரைக்கோ யானே ஊர்கடல் |
| ஓதஞ் சென்ற உப்புடைச் செறுவின் |
| கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த |
| கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய |
5 | முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை |
| எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் |
| துறுகடல் தலைய தோடுபொதி தாழை |
| வண்டுபடு வான்போது வெரூஉந் |
| துறைகெழு கொண்கன் துறந்தனன் எனவே. |
(சொ - ள்.) ஊர் கடல் ஓதம் சென்ற உப்பு உடைச் செறுவில் - ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிப்பரந்த உப்புப் படுதலையுடைய சேற்றினையுடைய; கொடுங்கழி மருங்கின் இரைவேட்டு எழுந்த கருங்கால் குருகின் - வளைந்த கழியிடத்து இரையை விரும்பி யெழுந்த கரிய காலையுடைய குருகின்; கோள் உய்ந்து போகிய - குத்துக்குத் தப்பிப் பிழைத்தோடிய; முடங்குப் புற மோவாய் இறவின் ஏற்றை - வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறவின் ஏற்றை; எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் துறுகடல் தலைய தோடு பொதி தாழை - மோதுகின்ற அலை கொழித்திடப்பட்ட மணல் மேடாகிய நெடிய கரையின் கண்ணே நெருங்கிய கடலின் புறத்திலே தலைசாய்ந்துடைய இலைகள் பொதிந்த தாழையினுடைய; வண்டுபடு வான்போது வெரூஉம் துறைகெழு கொண்கன் - வண்டுகள் வந்து மொய்க்காநின்ற வெளிய பூவை நோக்கி இதுவுமொரு குருகு கோலுமென்றஞ்சா நிற்கும் துறைபொருந்திய கடற்கரைக்குத் தலைவனாகிய நங்காதலன்; துறந்தனன் எனவே யான் யார்க்கு நொந்து உரைக்கோ - என்னைத் துறந்து சென்றொழிந்தனனென்று யாரிடத்தில் யான்படுந் துன்பத்தையெல்லாம் புலப்படுத்து வருந்தி உரையாநிற்பேன்! எ - று.
(வி - ம்.) குருகு - நாரையின் பகுதியாகிய "நெடலை, வக்கா" முதலாயின; இவையே தாழம்பூ மோத்தைபோ லிருப்பன. இது தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு கூறியது.